தத்துவம், கொள்கை, கொடி, சின்னம் இதில் எது முதன்மையானது என்றால், இவை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு முன் வந்து நிற்கும் ’பேச்சு’. இன்னும் சொல்லப்போனால் பேசியே மக்களிடம் செல்வாக்கு பெற்று ஆட்சிக்கு வந்தவை இங்குள்ள திராவிடக் கட்சிகள். அந்தப் பேச்சுதான் அதுவரை மக்களிடம் புழக்கத்தில் இருந்த வடமொழி வார்த்தைகளை, தனித்தமிழ் சொற்களாக்கின. புராண, சமஸ்கிருத கலப்பு வசனங்களையே பேசி வந்த திரை மொழியையும், உரையாடலுக்கு மாற்றிய பெருமை அரசியல் மொழிக்கு உண்டு.
பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, ஈ.வே.கி.சம்பத், பேராசிரியர் அன்பழகன் என எண்ணற்றோர் பேசிய தமிழ்நடையே பிற்காலத்தில், தமிழக அரசியல் பேச்சின் தாய்நடையானது. அந்தளவிற்கு இவர்களின் அரசியல் மொழி தமிழ் மக்களின் காதுகளையும், கூடவே மனங்களையும் கொள்ளை கொண்டன. ஆனால், அண்ணாவின் பேச்சைக் கேட்க இரவு பகல் பாராமல் காத்துக்கிடந்த காலமெல்லாம் இப்போது இல்லை. கருணாநிதியின் சொல்வீச்சை, கார்களில் மறைந்திருந்து கேட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் இன்றில்லை. முன்பு ஐந்து நாட்கள் நடத்திய மாநாடுகளையே, இன்று ஒரு நாளாக சுறுக்கி விட்டன கட்சிகள்.
அன்று போல் இல்லாமல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இக்காலத்தில் இந்த மாற்றம் இயல்புதான் என்றாலும், அன்றைய அரசியல் சூழல், தலைவர்கள், பேசப்பட்ட பேச்சுகள், அதனை உள்வாங்கிய மக்கள் ஆகியவற்றை அவ்வளவு எளிதாக எண்ணிட முடியாது. மக்களிடையே பேசுவதை வெறும் வாக்கிற்கான அறுவடையாக மட்டுமே பார்க்காமல், பாமரர்களை அரசியல்மய படுத்துவதை முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தனர் அப்போதைய தலைவர்கள். அதோடு, அப்பேச்சுகளில் சமுதாய நலன், பகுத்தறிவு, மொழியுணர்வு, சகோதரத்துவம் என்பவை நிரம்பியிருந்தன. எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் கண்ணியத்துடனே சொற்போர் நடத்தின அக்கால ஒலிப்பெருக்கிகள். மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மனமுகர்ந்து, வசவாளர்களையும் வாழ்த்தியது அக்கால அரசியல் மொழி.
ஆனால், இந்த நிலையும் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அரசியல், கருணாநிதி-எம்ஜிஆர் என்றாகிப் போனபின், குறிப்பாக எம்ஜிஆரின் எழுச்சிக்குப் பின் அதன் பாதை மாறியது. அதுவரை மேடைகளில் ஒலித்து வந்த, கொள்கை, கோட்பாடு, சமூக நீதி என்பதேல்லாம் தனிமனித துதிபாடல் என்ற நாயக வழிபாட்டினுள் சென்றது. கூடவே தனி மனித விமர்சனம் என்ற ஒரு உட்பிரிவையும் அது அழைத்து வந்தது. பின்னர் அதற்காகவே இங்குள்ள கட்சிகள் பேச்சாளர்களையும் வளர்த்தன. அப்படி பார்க்கப்பட்டவர்கள்தான் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், புதுக்கோட்டை விஜயா, எஸ்.எஸ்.சந்திரன் போன்றவர்கள். இன்று அந்த இடத்தையும் தலைவர்களே எடுத்துக்கொண்டதால் அவர்களுக்கான இடமும் குறையத் தொடங்கியுள்ளது.