சென்னையில் இந்தியத் தொழில் நுட்ப கல்விக் கழகம் அமைப்பதற்கு 1956ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் ராஜ் பவன் அருகிலிருந்த 650 ஏக்கர் நிலத்தினை சென்னை ஐஐடி-க்கு ஒதுக்கினார். அந்த நிலத்தின் உரிமையாளராகச் சென்னை ஐஐடி பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 1961ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவன சட்டத்தில் ஐஐடிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தினை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த நிலத்தை வேறு பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டுமென்றால், இந்தியக் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டுமென அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஐஐடி கல்வி நிறுவனத்தை நிர்வகிக்கத் தேவையான குழுக்கள் அமைத்துக் கொள்ளவும் வழி செய்யப்பட்டது. ஆனால் சட்ட விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனத்திற்கு நிலத்தினை ஐஐடி நிர்வாகம் தாரை வார்த்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடியில் முன்னாள் மாணவர் முரளிதரன் கூறியதாவது, சென்னை ஐஐடிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தினை குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறாமல் டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். ஐஐடியை ஒட்டியுள்ள கானகம் கிராமத்தில் 16.4 ஹெக்டர் நிலம் ஐஐடி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிலத்தை ஐஐடியின் அனுமதி பெறாமல் தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளனர்.