சேலம் ஆத்தூரிலுள்ள கங்கவல்லி பகுதியில் ராஜசேகரன் என்ற ரியல் எஸ்டேட் தரகர் ஐம்பொன் சிலையொன்றை விற்க முயல்வதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர், காவலர் ஒருவரை சிலை வாங்கும் நபர் போல் நடிக்க வைத்து வாட்ஸ் ஆப் மூலம் ராஜசேகரனிடமிருந்து சிலை குறித்த தகவலைப் பெற்றுள்ளனர். சிலையின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய் என பேரம் பேசியுள்ளார். பின்னர், சிலையின் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டதற்கு, அதற்கு மறுப்பு தெரிவித்த ராஜசேகரன், முன்தொகையாக 10 லட்சம் ரூபாயை செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.
அதற்கு சிலை வாங்கும் நபர் போல் நடித்த காவலரும் ஒப்புக்கொண்டு பத்து லட்சு ரூபாய் பணத்துடன் ராஜசேகரன் வீட்டிற்குச் சென்று கொடுத்துள்ளார். பத்து லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு சிலையை காட்டியபோது, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஎஸ்பி ராஜராம் தலைமையிலான அலுவலர்கள் ராஜசேகரனை சுற்றி வளைத்து அவரிடமிருந்து சிலையைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர் தொல்லியல் ஆய்வாலர்கள் சிலையை ஆய்வு செய்ததில், இது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன் சிலையென்றும் பிற்காலச் சோழர்கள் காலச் சிலையாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.