பேரிடர் மேலாண்மை கல்வி பயிலும் மாணவர்களுக்கான கருத்தரங்கம் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசிய நதிகள் சீரமைப்பு மற்றும் நீர்வள ஆதார மையத் தலைவர் சத்தியகோபால் ஐஏஎஸ், “இயற்கை சீற்றங்களில் நாம் பல்வேறு படிப்பினைகளை பெற்றுள்ளோம். அதனால் அந்தப்பேரிடர்களை நாம் மிகச் சிறப்பாக எதிர்கொள்ள முடிந்தது. நாம் எதிர்கொண்ட சீற்றங்களில் என்ன நடக்கும் எனத் தெளிவான விபரங்களை நாம் முன்கூட்டியே அறிந்திருந்தோம். ஆபத்தான இடங்களை நான்காகப் பிரித்து, அதனடிப்படையில் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால் ஆபத்துகளில் இருந்து மக்களைக் காக்க முடிந்தது.
எங்கே, என்ன நடக்கிறது. நீங்கள் வசிக்கும் பகுதியில் என்ன நிலை என அனைத்தையும் அறிந்துகொள்ள டி.என். ஸ்மார்ட் (tnsmart) செயலியை பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.