மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி அதிமுக. மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும், பன்னீர்செல்வம் கட்சியையும் சிறப்பாக நடந்திக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் 40 இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும்
பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பற்றி எனக்கு தெரியாது. அதிமுகவில், கூட்டணி தொகுதிப் பங்கீடு செய்ய, தேர்தல் அறிக்கை தயார் செய்ய, பிரச்சாரம் செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவை பணிகளை செய்து கொண்டிருக்கின்றன. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளது
கட்சியில் தேர்தல் பொறுப்பு ஏற்றுள்ளவர்கள் அனைவரும், எது நல்லது என்று தேர்ந்தெடுத்து அதற்கேற்ப செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. யாருடன் கூட்டணி என்பதை அதிமுக தலைமைக்கழகம் இன்னும் முடிவு எடுக்கவில்லை.
ஜெயலலிதா எப்படி செயல்பட்டாரோ அந்த வழியிலேயே நாங்கள் செயல்படுகிறோம். இன்றைய சூழ்நிலை பற்றி கட்சியை வழிநடத்துபவர்களுக்கு நன்றாக தெரியும். எப்படி செயல்பட்டால் நன்று என்பதை அறிந்து செயல்படுவார்கள். கூட்டணி தேவையா இல்லையா என்பதை அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்
அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. கட்சிக்கும் நாட்டுக்கும் என்ன நல்லது என்பது எங்களை வழி நடத்துபவர்களுக்கு தெரியும். அதிமுக இதுவரை தனித்துதான் செயல்படுகிறது கூட்டணி தேவையா இல்லையா என்பதை தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது
ஜெயலலிதா தற்போது இல்லை என்றாலும், அவர் இருப்பதாக நினைத்துதான் செயல்படுகிறோம். இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை அதிமுகவை யாரும் மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியாது
நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, தமிழகத்தின் உரிமையை பெறுவதற்காகதான். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்துக்கு தரவேண்டிய 15 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டபோது வழங்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்தித்து தமிழகத்துக்கு வர வேண்டிய தொகையை கேட்டபோது அதுவும் வரவில்லை
கஜா புயல் பாதிப்புக்கு கேட்ட தொகையும் வரவில்லை. காவிரியில் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்றும் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்த பாதகங்களை வெளிப்படுத்தி வருகிறேன்