இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பழங்குடியின மக்களின் நலவாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த 83 வயதான மனித உரிமை ஆர்வலர், ஸ்டான் சுவாமியை மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி, தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு தொடுத்து கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தை, முறைகேடாக பயன்படுத்தி தனிமனித வஞ்சம் தீர்க்க ஆளும் வர்க்கம் ஏவக்கூடும் என அப்போதே கடுமையாக எதிர்த்தோம். இன்றைக்கு ஸ்டான் சுவாமி எனும் மக்களின் நலனுக்காக துணைநின்ற பாதிரியாரை கைது செய்து அதனை நிரூபித்திருக்கிறது மத்திய அரசு. பழங்குடியினர் நலனுக்காக போராடியதாலேயே அவரை மாவோயிஸ்டு என முத்திரைக்குத்தி, தளர்ந்த வயதினையும் பொருட்படுத்தாமல் கரோனோ நோய்த்தொற்று காலத்தில் சிறிதும் இரக்கமின்றி அவரை கைது செய்திருப்பது மிகப்பெரும் மனித உரிமை மீறலாகும்.