தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிராமப்புறங்களில் தொற்றுப் பரவலை எப்படி தடுப்பது? விளக்குகிறார் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர்! - கருப்பு பூஞ்சை

தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் தற்போது கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை விளக்குகிறார் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி.

Director
குழந்தைசாமி

By

Published : May 25, 2021, 12:15 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில், கிராமப்புறங்கள் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. தொற்று பாதிப்புக்குள்ளான கிராம மக்கள், அங்குள்ள மருத்துவமனைகளுக்குச் செல்வதிலும் கடும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். போதிய எண்ணிக்கையில் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையால், தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் கிராமப்புறங்களில் உள்ள மக்களைக் கண்காணிப்பதிலும் தொய்வு ஏற்பட்டது.

கரோனா தொற்றின் முதல் அலையின் போது, பெரும்பாலும் நகர்ப்புறங்களில் உள்ளவர்களிடமே தொற்று அதிகமாக காணப்பட்டது. தற்போது சமுதாயத்தில் மிக அதிகளவில் நோய்த் தொற்று பரவியுள்ளதால், ஏற்கெனவே தொற்று ஏற்படாத அனைவருக்கும், நகர்ப்புறம், கிராமப்புறம் என வேறுபாடின்றி எல்லா இடங்களிலும் பரவி வருகிறது என்கிறார் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி.

கிராமப்புறங்களில் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றுப் பரவலை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பான ஆலோசனைகளை அவர் வழங்கியுள்ளார். அதன் விவரம் வருமாறு:

இறப்பு சார்ந்த காரியங்களுக்கு மிகவும் நெருங்கிய உறவினர், இறுதி சடங்குகளைச் செய்பவராக இருந்தால் மட்டுமே செல்ல வேண்டும்.

திருமணம் உள்பட சுப காரியங்களை ஒத்திவைக்கலாம். தவிர்க்க முடியாத நிலையில், மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.

தேவையின்றி மருத்துவமனைகளுக்கு போகக்கூடாது.

உற்றார், உறவினர்களைப் பார்க்க மருத்துவமனைகளுக்குச் செல்லக்கூடாது.

பிரசவத்தின் போது ஒரேயொரு பெண் துணை (Birth Companion) உடன் இருந்தால் போதுமானது.

குழந்தையைப் பார்க்க உறவினர்கள், நண்பர்கள் யாரும் மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது.

உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு, ஆரோக்கியமாக இருக்கும் வயது குறைந்த உறவினர் ஒருவர், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் ஒருவர், அறிகுறிகளே இல்லாமலோ அல்லது சாதாரண சளி காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் உடன் இருக்கலாம்.

நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்களுக்குத் திரும்புபவர்கள், வீட்டிலுள்ள மற்றவர்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளுக்குச் செல்லக் கூடாது.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால், தாத்தா, பாட்டி, உறவினர்கள் வீட்டிற்கு, பெருந்தொற்று குறையும் வரை செல்லக்கூடாது.

நியாய விலைக் கடைகள், பால் கூட்டுறவு சங்கங்கள், உள்ளூர் மளிகைக் கடைகள் முதலான இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும்.

வெளி வேலைகளுக்குச் சென்று திரும்புகிறவர்கள் கால், கை மற்றும் முகத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடமிருந்து தனித்திருக்க வேண்டும்.

கிராமங்களிலுள்ள பொது இடங்களுக்குச் செல்லக்கூடாது.

மளிகைக் கடைகள், பால் கூட்டுறவு சங்கங்கள், நியாய விலைக் கடைகள் போன்ற இடங்களில் பணிபுரிபவர்கள் கரோனா அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் பாதுகாப்பு

கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு மருத்துவமனைகளில் கூட்டம் குறைவாகவுள்ள போது தான் செல்ல வேண்டும்.

கர்ப்பிணியின் உடன் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

கர்ப்பிணியைப் பார்க்க வீட்டிற்கு யாரும் வரக்கூடாது.

கரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரும் வரை வளைகாப்பு விழா போன்றவற்றை நடத்தக் கூடாது.

பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவ ஆலோசனையுடன் தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறந்த குழந்தையைப் பார்க்கவும் யாரும் வரக்கூடாது.

குழந்தைக்குத் தடுப்பூசி போட செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்குத் தனி இடம், தனி நேரம் ஒதுக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கரோனா அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

சளி, தும்மல், இருமல், காய்ச்சல், தொண்டை வலி, கடுமையான தலைவலி, உடல்வலி, வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நடமாடும் மருத்துவமனை மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் ஊரின் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர், கிராம சுகாதார ஆய்வாளர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களின் செல்போன் எண்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உதவி எண்கள்

104, 108 மற்றும் மாவட்ட மாநில உதவி எண்களை (044-29510400; 044-29510500; 94443 40496 & 87544 48477) தெரிந்து வைத்துக் கொண்டு தேவையான நேரத்தில் அவசர உதவிக்காகப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுவோர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டும். மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம்.

பல்ஸ் ஆக்சி மீட்டர்

வீட்டில் உள்ளவர்கள் 'பல்ஸ் ஆக்சி மீட்டர்' வைத்து ஆக்ஸிஜன் அளவை மூன்று நான்கு முறைகள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

ஆக்ஸிஜன் அளவு 95 விழுக்காட்டிற்கு கீழே சென்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது முக்கியம்.

ஆக்ஸிஜன் அளவு மிக, மிக அபாயகரமான அளவான எழுபது சதவீதத்திற்கும் கீழே குறையும் போது தான் மூச்சுத் திணறல் ஏற்படும்.

மூச்சுத் திணறல் ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்றால் போதும் எனத் தவறாக நினைத்துக் கொண்டு காலதாமதமாக மருத்துவமனைக்கு செல்வது உயிரிழப்பை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது பத்து 'பல்ஸ் ஆக்சி' மீட்டர்கள் இருக்க வேண்டும்.

கிராமப்புற மக்கள் பாதுகாப்பு


முகக்கவசம் அணிதல்

கைகளை அடிக்கடி நன்கு கழுவுதல்

சக மனிதர்களிடமிருந்து இரண்டு மீட்டர் தள்ளி இருத்தல்

கூட்டம் கூடும் இடங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் செல்லக்கூடாது.

கைகள் அடிக்கடி படக்கூடிய இடங்களை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்

கதவு, ஜன்னல்களை நன்கு திறந்து காற்றோட்டமாக வைத்துக் கொள்ளுதல்

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்

இதுவரைத் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் விதண்டாவாதம் பேசுவோர், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் கவனமாக இருப்பதோடு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். தற்போதுள்ள அபாயகரமான சூழ்நிலையை மனதில் கொண்டு, கிராம மக்கள் தயவு செய்து எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். உயிரைக் காத்துக் கொள்ளும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து மனம் தளராமல் செயல்பட்டு, கரோனா தொற்றை வெல்வோம் என்றார் குழந்தைசாமி.

ABOUT THE AUTHOR

...view details