சென்னை:எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழக முதலமைச்சர் பதக்கங்கள் உட்பட கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 வரை என 322 பதக்கங்கள் 319 காவலர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சிறந்த போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கினார்.
முன்னதாக காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட அணிவகுப்பு மரியாதையும் தமிழக முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அவர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து புதிய புதிய தொழிற்சாலைகள் வருகிறது என்றால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளதால் தான் என்றும் காவலருக்கு ஒரு நாள் கட்டாய விடுப்பு, கரோனா கால ஊக்கத்தொகை 5 ஆயிரம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
எல்லோருக்கும் எடுத்துக்காட்டான திராவிட மாடல் ஆட்சியை தனிழ்நாட்டில் வழங்கி வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி - எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னதமான தத்துவத்தின் அடிப்படையில் திட்டங்களை தீட்டி வருகிறோம். இவை அனைத்துக்கும் அடிப்படை அமைதிதான். அமைதியான சூழலில்தான் தொழில் வளர்ச்சியாக இருந்தாலும் - சமூக முன்னேற்றமாக இருந்தாலும் அது ஏற்படும்.
புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என்றால், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால்தான். அத்தகைய அமைதி சூழலை காக்க வேண்டும். அதற்குக் குந்தகம் ஏற்படுத்தக்கூடிய சிறு சம்பவமும் நடைபெறக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்த விரும்புகிறேன்.