மணல் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களை நீதிபதி என்.கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு முழுவதும் மணல் கடத்தல் வழக்குகளில் மாவட்ட வாரியாக எத்தனை லாரி உரிமையாளர்கள், எத்தனை லாரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது உள்ளிட்ட பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
இதற்கு தமிழ்நாடு டிஜிபி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்குகள் மீண்டும் நேற்று (செப்.16) நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டிஜிபி தாக்கல் செய்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் மணல் கடத்தல் கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது.
ஆனால், செல்வாக்கு இல்லாத வலிமை இழந்தோர் மீது வழக்குகளை பதிவு செய்து, அவர்களை காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்கின்றனர் என்று வேதனை தெரிவித்தனர்.
ஒரு காவல் நிலையம் அதிகார எல்லைக்குள் மணல் கடத்தப்படுகிறது என்றால் அங்கு பணியில் உள்ள காவலர்கள், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தெரியாமல் நடக்குமா? வருவாய் துறையில் கிராம நிர்வாக அளவில் இருந்து வட்டார வருவாய் அலுவலர்கள், வட்டாச்சியர் ஆகியோருக்கும் மணல் கடத்தப்படுவது தெரியாதா? இந்த அலுவலர்கள் எல்லாம் மணல் கடத்தப்படுவதை தெரிந்தும் தடுக்காமல் உள்ளனர்.
அதனால், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக இவர்கள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யக்கூடாது? அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால்தான் மணல் கடத்தலை தடுக்க முடியும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர், மணல் கடத்தல் தொடர்பாக காவல் துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு எதிராக எத்தனை மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.