சென்னை: தீபாவளிப் பண்டிகையின்போது வெடிக்கும் பட்டாசுகளின் புகையினால் கரோனா பாதித்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து மருத்துவர்களின் கருத்துகளை அறியலாம்.
இந்தியாவில் அதிகளவில் பட்டாசு உற்பத்தி செய்யும் மாநிலம், தமிழ்நாடு. இங்கிருந்து பிற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் பட்டாசு ஏற்றுமதி செய்யப்படுவதுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி புத்தாடை அணிந்து பட்டாசு வெடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.
ஆனால் இந்தாண்டு உலகையே அச்சுறுத்தும் கரோனா பெருந்தொற்று மனிதர்களின் வழக்கமான நடைமுறைகளை மாற்றியுள்ளது. இதில், தீபாவளிப் பண்டிகை மட்டும் என்ன விதிவிலக்கா?
தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசுகளை குறைந்த அளவில் வெடிக்க வேண்டுமென மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு கூறுகிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, 'மருத்துவமனையில் படுக்கை வசதிகள் அதிகரித்தது, செயற்கை சுவாசக் கருவி வசதிகள் கொண்ட படுக்கைகளை அதிகரித்தது, போதுமான அளவு மருந்து கொள்முதல் செய்யப்பட்டு வழங்கியது போன்றவற்றால் கரோனா தொற்று தமிழ்நாட்டில் இறங்கும் முகத்திலுள்ளது.
ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை இருந்த நோய்த் தொற்றின் எண்ணிக்கையுடன் தற்போது ஒப்பிடும்போது, வெகுவாக குறைந்துள்ளது. இது இந்தாண்டு இறுதிக்குள் மிகவும் குறைந்துவிடும். காற்று மாசு ஏற்பட்டால் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு சுவாசிப்பது சிரமமாக இருக்கும். எனவே, இந்தச் சூழ்நிலையில் புகையில்லாத தீபாவளி கொண்டாடுவதே சிறப்பானதாக இருக்கும்.
கரோனா விகிதம் குறைந்து வருகிறது
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தற்பொழுது 20 விழுக்காடு படுக்கைகள் மட்டும் தான் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படுகிறது. மீதமுள்ள 80 விழுக்காடு படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா இறப்பு விகிதமும் கணிசமாகக் குறைந்து வருகிறது. இச்சூழலில், நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு பேட்டி எனவே, புகை இல்லாத மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். மேலும் அதே நேரத்தில் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றி, பெரியவர்கள் கண்காணிப்புடன் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கவேண்டும்' என்றார்.
மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம்
இதுகுறித்து அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் வசந்தாமணி தெரிவிக்கையில், 'பட்டாசு நமது மகிழ்ச்சிக்காக வெடிக்கிறோம். இந்தாண்டு பெருந்தொற்றுடன் கூடிய தீபாவளிப் பண்டிகையை நாம் எதிர்கொள்ளவுள்ளோம். எனவே, இந்த தீபாவளியை கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு கொண்டாட வேண்டும் என்பதே முக்கியம்.
புகை அதிகம் வராத பட்டாசு எது என்பது குறித்து எல்லோருக்கும் விழிப்புணர்வு இருக்காது. நிறையப் பட்டாசு வெடிக்கும்போது காற்று மாசடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. காற்று மாசடைந்தால், கரோனா நோய்த்தொற்றினால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, குணமடைந்த நோயாளிகளுக்குப் பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து, நுரையீரலில் பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கக் கூடாது. அவர்கள் தனியாக ஒரு ரூமில் இருக்க வேண்டும். மேலும் சத்தத்தை எழுப்பும் பட்டாசு வெடிப்பதையும் கேட்காமல் இருப்பது நல்லது.
பட்டாசு வெடிப்பவர்கள் குழந்தைகளைத் தனியாக விட்டு பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக்கூடாது. பட்டாசு வெடிப்பதற்கான பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி, தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்து வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த தண்ணீரில் மட்டுமே கழுவ வேண்டும். தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் டீ தூள், மாவு, மை போன்றவற்றை இடக் கூடாது. முதலுதவி சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் வசந்தாமணி பேட்டி ரத்தத்தின் பிராணவாயு அளவை கருத்தில் கொள்ளுங்கள்
கரோனா தொற்றிலிருந்து மீண்ட 60 விழுக்காட்டினர் நுரையீரல் பாதிக்கப்படுவதற்கும், வேறு நோய்கள் இருந்தவர்கள் காற்று மாசினால் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. நோயினால் ஏற்படும் பாதிப்பு ஒவ்வொருவருக்கும் மாற்றம் ஏற்படும்.
ரத்தத்தின் பிராண வாயுவின் அளவு 95 விழுக்காட்டிற்கும் குறைவாக வருபவர்களுக்கு, கரோனாவிற்குப் பிந்தைய நுரையீரல் பாதிப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் நான்கு வாரங்களுக்கு ஒரு முறைத் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் சாதாரணமான நிலையை எப்போது அடைகிறார்களோ, அதுவரைத் தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்தும் சாதாரணமாக இருந்தால், வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்' என்றார்.
ஆண்டிற்கு ஒருமுறை வந்தாலும், நமது மகிழ்ச்சிக்காக மட்டுமில்லாமல், நோயாளிகளின் நலனைக் கருத்திற்கொண்டும் மாசில்லா தீபாவளியை நாமும் கொண்டாடுவோம்.