சென்னை அபிராமபுரத்தில் உள்ள இரு வீடுகளில், கதவை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சிசிடி காட்சிகளை சோதித்தபோது கொள்ளை நடந்த வீட்டிற்குள் எவரும் வந்து சென்றதற்கான காட்சிகள் ஏதும் சிக்கவில்லை. ஆனால் ஒரு சிசிடிவி காட்சியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 10 வீடுகள் தள்ளி இருளில் ஒரு நபர் நடந்து செல்லும் காட்சி மட்டும் பதிவாகி இருந்தது.
அதனை வைத்து அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது ஒரு சிசிடிவியில் கொள்ளையனின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. இதையடுத்து பல வருடங்களாக வீடுகளின் கதவை கவ்பார் என்றழைக்கப்படும் இரும்பு கம்பியால் உடைத்து கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையன் மைக்கேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடித்த காவல்துறையினர், அவரது இரு மனைவிகளிடம் இருந்தும் 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 10 சவரன் நகைகளை கைப்பற்றினர்.
மைக்கேலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, ஆயுதம் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்த மைக்கேல், படிப்பை முடித்த பின்னர் கொக்கைன் போதைக்கு அடிமையாகி உள்ளார். வசதியான குடும்பத்தில் பிறந்த மைக்கேலின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்று விட்ட நிலையில், மைக்கேல் போதைக்கு அடிமையாகி சென்னையிலேயே இருந்துள்ளார்.
கொக்கைன் போதைப்பொருள் வாங்க 25 வருடங்களுக்கு முன்பு கே.கே.நகரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க தொடங்கிய மைக்கேல், அசோக் நகர், தாம்பரம், சேலையூர் என கைவரிசை காட்டிவிட்டு அடுத்தடுத்து பங்களா வீடுகளை கொண்ட மயிலாப்பூர் பகுதி வீடுகளை கொள்ளையடிப்பதற்கு தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகின்றது. இதுவரை 55 வீடுகளை உடைத்து கொள்ளையடித்துள்ள மைக்கேல், அபிராமபுரத்தில் 56ஆவது முறையாக கைவரிசை காட்டியபோது சிக்கியுள்ளதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
மைக்கேல் மீதுள்ள 55 வழக்குகளில் 30 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாததால் தண்டனையில் தப்பிய அவரை நான்கு முறை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். வீடுகளில் இருந்து நகை பணத்தை மட்டுமே திருடுவதை கொள்கையாக கொண்ட மைக்கேல், முதல் மனைவியிடம் கொஞ்சம் பணத்தையும், இரண்டாவது மனைவியிடம் நகைகளையும் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மைக்கேலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, ஆயுதம் எப்போது போலீசில் சிக்கினாலும் தனது கை கால்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று கெஞ்சி கேட்பது அவனது வழக்கம் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது வரை ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட கொள்ளையன் மைக்கேல், சிறையில் இருந்து வெளியே வந்தால் அந்த பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து ஹாக்கி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்பெல்லாம் கொள்ளையில் ஈடுபட்டால் இரண்டு மாதங்கள் கழித்து தான் காவல்துறையினரால் கண்டறிய முடியும் என்றும், தற்போது ஊர் முழுக்க சிசிடிவி காமிரா வைத்திருப்பதால் விரைவாக கண்டுபிடித்து விடுகின்றனர் என்று ஆதங்கப்பட்ட மைக்கேல், சிசிடிவியே இல்லாத பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து ஒவ்வொரு மாடியாக தாவிச்சென்று ரிஸ்க் எடுத்து 10 வீடுகள் கழித்து கதவை உடைத்து கொள்ளையடித்ததாகவும், அப்படி இருந்தும் போலீசில் சிக்கி கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மயிலாப்பூர் துணை ஆணையரின் தனிப்படை காவல்துறையினர் கொள்ளையன் மைக்கேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.