தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரியர் தேர்வு ரத்தை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு! - தமிழ்நாடு செய்திகள்

சென்னை: அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

highcourt
highcourt

By

Published : Oct 7, 2020, 6:21 PM IST

Updated : Oct 7, 2020, 6:26 PM IST

பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு, இறுதி பருவத்தேர்வு தவிர, மற்ற பருவத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதேபோல அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அரசின் அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலும் (ஏஐசிடிஇ) தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் சத்ய நாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் கேட்கப்பட்டது. அரசின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என சில மாணவர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும், அரியர் தேர்வு ரத்துக்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் மொத்த அரியர் எண்ணிக்கை, அவர்களின் கல்வி விவரங்கள் கேட்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

ஏற்கனவே சொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படித்தவர்களே பணியாற்றுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் எனவும் கேள்வி எழுப்பி, இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க:’குடிநீர் ஆலைகளை இழுத்து மூடுங்கள்’ - உயர் நீதிமன்றம்

Last Updated : Oct 7, 2020, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details