சென்னை:பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், 2 படங்களை தயாரிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 97 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். பின் அந்த படங்களை வங்கிக்கு தகவல் தெரிவிக்காமல் 130 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் வாங்கிய கடனை செலுத்தாமல் மற்ற கடன்களை செலுத்தியிருக்கிறார்.
இதையடுத்து, வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடனுக்காக அடமானம் வைத்த அவரது சொத்தை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து கடன் வசூலிப்பு தீர்ப்பாயம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் ரவிசந்திரன் வழக்கு தொடர்ந்து இடைக்கால நிவாரணம் பெற்றார்.
இறுதியாக கடந்த ஜூன் 24 ஆம் தேதி ஏலம் குறித்து வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தெடர்ந்தார். அதில், கடன் பாக்கித் தொகை 37.90 கோடி ரூபாயை ஒரே தவணையில் செலுத்துவதாக கூறியிருந்தார்.