மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்கள் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 40 மனுக்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகமது ரியாஸ் முன்ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி, “நாட்டையே ஊரடங்கு முடக்கி போட்டிருந்தாலும் மணல் கடத்தல்காரர்களை மட்டும் இந்த ஊரடங்கு பாதிக்கவில்லை.
இத்தகையவர்களால் நிலத்தடி நீர் ஆதாரங்களும் சுற்றுச்சூழலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நீதிமன்றத்திற்கு வந்த மணல் கடத்தல் தொடர்பான முன்ஜாமின் வழக்குகளில் கடுமையான நிபந்தனைகள் மற்றும் அபராதம் விதித்து முன்ஜாமீன் வழங்கிய போதும், நீதிமன்றத்திற்கு வரும் முன்ஜாமீன் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
தினந்தோறும் குறைந்தது மணல் கடத்தல் தொடர்பான 15 முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. மணல் கடத்தலை தடுக்க நீதிமன்றங்கள் கடுமையான பல உத்தரவுகளை பிறப்பித்தும் அதை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.