தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நிவர் புயல்: 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: நிவர் புயல் காரணமாக காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

heavy-rain
heavy-rain

By

Published : Nov 22, 2020, 3:39 PM IST

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் இன்று (நவம்பர் 22) வெளியிட்டுள்ள காணொளியில், "தெற்கு மற்றும் வங்கக் கடலின் மத்திய பகுதியில் நேற்று (நவம்பர் 21) உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் (நிவர்) வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும். இதனால், தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை இடியுடன் கூடிய கன மழையும் பெய்யும்.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் பகுதிகளில் நாளை மறுநாள் (நவம்பர் 24) இடியுடன் கூடிய அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழையும், ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

heavy-rain

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் நவம்பர் 25ஆம் தேதியன்று அதி கன மழையும், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழையும், ஏனைய வட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வங்கக் கடல் பகுதிகளில் நவம்பர் 22 அன்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும், நவம்பர் 23 தென்மேற்கு மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும், நவம்பர் 24, 25 ஆகிய தினங்களில் தென்மேற்கு மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதியில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்". இவ்வாறு அந்த காணொளியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details