சென்னை: தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்தத் காற்றழுத்தப் தாழ்வுப்பகுதி மேற்குத் திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 18) தெற்கு ஆந்திரா - வட தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகர்கிறது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிக கன மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டிற்கு இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழை பெய்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் தீவிரத்தைப் பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட நிலையில், விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கும் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:2 நாட்களுக்கு உணவுப்பொருட்களை இருப்பு வைத்துக்கொள்க - சென்னை மாநகராட்சியின் அன்பான வேண்டுகோள்