சென்னை: லயோலா கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தும் மையத்தை மா.சுப்பிரமணியன்தொடங்கி வைத்தார். அப்போது போது பேசிய அவர், "முதலமைச்சர் உத்தரவின் படி கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் ஈஞ்சம்பாக்கம், விருகம்பாக்கத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தலா 100 படுக்கை வசதிகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. லயோலா கல்லூரியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய தனிமைப்படுத்தும் மையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநராட்சியில் கடந்த 3 நாட்களில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது மனநிறைவைத் தருகிறது.
ஐந்து பொது மருத்துவமனைகளில் 995 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கனவே 300 படுக்கைகளும், மேலும் 595 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களும் இன்று வர உள்ளன. அதனை தேவையான இடங்களில் பொருத்த உள்ளோம்.
சென்னையில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாத ஏழை எளியவர்கள் கரோனா தனிமைப்படுத்தும் மையங்களைப் பயன்படுத்தலாம். 22 இடங்களில் 6,982 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், தற்போது, 2 , 686 பேர் மட்டும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். 4,692 படுக்கைகள் தயாராக உள்ளன.
கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாட்டில் 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் சுமார் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ நெறிமுறைகளின் படி கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளது.