சென்னை:அரசுப் பள்ளிகளில் பணியாற்றி, கல்வியாண்டின் மத்தியில் பணி நிறைவுபெற்ற ஆசிரியர்கள், மறு நியமனம் கோரி அளித்த விண்ணப்பத்தை நிராகரித்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி, கல்வியாண்டு முடியும்வரை மறு நியமனம் வழங்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி, பள்ளிக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட கல்வித் துறை அலுவலர்கள் தாக்கல்செய்த மேல்முறையீட்டு வழக்கை, நீதிபதிகள் வைத்தியநாதன், விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் உபரி ஆசிரியர்கள் மாவட்டத்தில் இருப்பதால், பணி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் அவர்களின் சேவை தேவையில்லை என்பதால், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், உபரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக, அரசு கொள்கை முடிவெடுத்து பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்குத் தொடராத நிலையில், மறு நியமனம் மறுத்த உத்தரவை ரத்துசெய்ய முடியாது என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.