சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல்செய்துள்ள மனுவில், "காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் தாமரைக்கேணி என்ற நீர்நிலையாகும்.
இந்த இடத்தை மேய்க்கால் புறம்போக்காக அறிவித்து காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) ஒப்புதல் பெறவில்லை. எனவே, நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்துக்குத் தடைவிதித்து நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வுசெய்ய ஐஐடியின் இரண்டு பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.
அதன்படி, நியமிக்கப்பட்ட ஐஐடி பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன், சவுமேந்திரர் ஆகியோர் அடங்கிய குழு ஏரிப் பகுதியை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்தது. அறிக்கையில், செம்மஞ்சேரி காவல் நிலையம் ஏரி ஆக்கிரமிப்பு இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தை மட்டும் இடித்துவிட்டால் பெரிய மாற்றம் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நீர்நிலையில் எந்தெந்த ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்பது குறித்து ஐஐடி அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தமிழ்நாட்டில் ஏராளமான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்ற அலுவலர்கள் தவறிவிட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.