சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன், “ நிவர் புயல் வங்கக்கடலில் புதுவைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 250 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவிலும், கடலுருக்கு தென்கிழக்கே சுமார் 240 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயலின் தற்போதைய காற்றின் வேகம் 105 முதல் 115 கி.மீ. ஆக உள்ளது. இது இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.
இது வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு காரைக்கால் - மாமல்லபுரம் இடையே, புதுவை அருகே கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் இரு நாட்களுக்கு பரவலாகவும், கடலோர மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யும்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.