குரூப் 4 தேர்வு தரவரிசைப் பட்டியலில் ராமநாதபுரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில், முதல் 100 இடங்களில் 35 பேர் இடம் பெற்றிருந்தனர். இதனால் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, கேள்விக்குள்ளான மையத்தில் தேர்வெழுதியவர்களிடம் தேர்வாணைய அலுவலர்கள் நேற்று விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடம் கேள்வித்தாளை வழங்கி விடை எழுதித்தரும்படியும் அலுவலர்கள் கேட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுதேர்வை நடத்தி அவர்களிடம் விடைகளையும் எழுதிப் பெற்றுள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட சில தேர்வர்களிடம் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி வரை நீண்ட இந்த விசாரணையில், தேர்வில் முறைகேடு செய்தவர்கள் யார் என்பதை தேர்வாணையம் கண்டறிந்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக அதிக மதிப்பெண்கள் பெற்று அரசுப்பணிக்கு தேர்வானவர்களிடம், பழைய கேள்வித்தாள்களை வழங்கி அவர்களின் திறனை அதிகாரிகள் சோதித்துப் பார்த்துள்ளனர்.