தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்கள் நேரடி கொள்முதல் - உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஊரடங்கின் காரணமாக வேளாண் விளை பொருட்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

highcourt
highcourt

By

Published : May 12, 2020, 4:08 PM IST

ஊரடங்கால் காய்கறி, பழங்கள் போன்ற விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, அவற்றை நேரடியாக கொள்முதல் செய்ய அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, வேளாண்துறை துணைச் செயலாளர் ரவிக்குமார் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ”அரசின் தோட்டக்கலை துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை மூலம் விளை பொருட்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 6,000 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் 1,100 மொபைல் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டுள்ளன.

கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 500 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டு சென்னையில் விநியோகிக்கபட்டது.

ஊரடங்கு காலக்கட்டத்தில் மட்டும் 53,593 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

மேலும், விளைபொருட்களைப் பாதுகாக்க குளிர்சாதனக் கிடங்குகளைப் இலவசமாக பயன்படுத்தி கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மொத்தமுள்ள 138 குளிர்சாதன கிடங்குகளில் 7755 மெட்ரிக் டன் அளவிலான விவசாயப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இது தவிர உழவன் செயலி மூலமும், இ-தோட்டம் இணையதளம் மூலம் swiggy,zomato உள்ளிட்ட உணவு விநியோகிக்கும் நிறுவனங்களோடும் ஒன்றிணைந்து விளைபொருட்கள் விற்கப்படுகின்றன.

நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 37,635 விவசாயிகளிடமிருந்து 2.75 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்காக 522.64 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி சந்தை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்காக கால் சென்டர்களும் அமைக்கப்பட்டுள்ளது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் விரிவான பதில் மனுவுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விவசாயிகளுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதை மாவட்ட வாரியாக உள்ள குறை தீர்ப்பு அலுவலகத்தில் முறையிடலாம் எனவும், மேற்கொண்டு ஏதேனும் கூடுதல் நடவடிக்கை தேவை என்றால் மனுதாரர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம் எனவும் தெரிவித்து வழக்கு விசாரணையை மே 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணிகள் குறித்து துணை முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details