சென்னை:தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்து கொள்ள ஏதுவாக "Google Read Along" என்ற செயலியைப் பயன்படுத்துவதற்கென பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இடையே முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (மே05) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நபார்டு திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம், மாவட்ட கனிமவள நிதி ஆகியவற்றின் வாயிலாக ரூ.181 கோடியே 3 லட்சத்து 94 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 208 அரசு பள்ளிக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் போன்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.