தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு - அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரிக் கேள்வி!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பைக் கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுப்பதற்காக தனி பிரிவை ஏன் தொடங்கக்கூடாது? என்பது குறித்து பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

By

Published : Feb 8, 2020, 4:23 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள மச்சிநாயக்கன்பாளையம் கிராமத்தில் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில், கட்டுமானங்கள் மேற்கொள்ள சார்பு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர் கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை, அரசு வழக்கறிஞர் முறையாக நடத்தவில்லை எனக் கூறி, சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞருக்கு எதிராக அளித்த புகார் மீதான விசாரணையை முடிக்கும்படி, பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி, ஆக்கிரமிப்புக்கு எதிராக புகாரளித்த அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பொங்கியப்பன் அமர்வு, இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் ஆக்கிரமிப்பாளருடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி, கோவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், அரசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்களை தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், வருவாய்துறை செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலாளரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி,

  • தமிழ்நாடு முழுவதும், மாவட்ட வாரியாக எத்தனை ஏக்கர் அரசு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன?
  • அதில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது? இந்த நிலங்களை மீட்க தொடரப்பட்ட வழக்குகள் எத்தனை?
  • அதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?
  • அதில் எத்தனை வழக்குகளில் அரசுத்தரப்பு முறையாக வழக்கை நடத்தவில்லை?
  • வழக்குகளை முறையாக நடத்தாத அரசுத்தரப்பு வழக்கறிஞர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

என, சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல, தமிழ்நாடு முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பைக் கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுப்பதற்காக தனி பிரிவை ஏன் தொடங்கக்கூடாது என்பது குறித்து பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்ட அவர்கள், அரசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதைத் தடுக்க, அந்த நிலங்கள் குறித்த விவரங்களை, அனைத்து மாவட்ட பதிவுத்துறைக்கும் ஏன் வழங்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பி, அவற்றுக்கும் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கோரி வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details