சென்னை:வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவக்குணம் கொண்ட பயிர்களை தமிழ்நாடு விவசாயிகள் பாரம்பரியமாகவே சாகுபடி செய்து வருகின்றனர். அதில், குளோரி லில்லி மிகவும் முக்கியமான மருத்துவப் பயிராகும். இதனை செங்காந்தள் மலர் என்றும், கண்வலிக்கிழங்கு என்றும் அழைப்பார்கள். செங்காந்தள் மலரானது நமது மாநில மலராகும்.
தமிழ்நாட்டில் கண்வலிக்கிழங்கு சுமார் 5,100 எக்டரில் பல மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு, ஆண்டுதோறும் 3,985 டன் கண்வலிக்கிழங்கு விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கண்வலிக்கிழங்கு விதையில், கொல்சிஸின் (Colchicin) எனும் மருத்துவக்குணம் கொண்ட வேதிப்பொருள் அதிகமாக உள்ளதால், புற்றுநோய், வாதம், வீக்கம் போன்ற நோய்க்கான மருந்து தயாரிப்பிலும், பாம்புக்கடி, தேள்கடி போன்ற விஷக்கடிக்கான மருந்துகள் தயாரிப்பிலும் முக்கிய பங்காற்றுவதாக அறிவியல் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த விதைகளிலிருந்து கிடைக்கக்கூடிய வேதிப்பொருள் மருந்து தயாரிப்புக்காக பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் திண்டுக்கல், திருப்பூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கண்வலிக்கிழங்கு விதைகள், வடமாநிலங்களிலுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த இடைத்தரகர்களால் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.