கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது. இந்த சூழ்நிலையில் கூட்டத்தைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துவிதமான மீன்பிடிப்புக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு தங்கள் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என்றும் தடையை நீக்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து மீனவர்கள் வலியுறுத்திவந்தனர். இந்நிலையில் தற்போது நாட்டுப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "நாட்டுப்படகுகள், 10 ஹெச்.பி.க்கு மிகாத வண்ணம் உள்பொருத்தும், வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் மட்டுமே மீன்பிடிப்பிற்கு அனுமதிக்கப்படும். இயன்றவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, குறைந்த அளவிலான மீனவர்களைக் கொண்டு மீன்பிடிப்பு மேற்கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.