சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA என்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம் என்றும்; நம் நாட்டில் இயங்கி வரும் பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ஆளுநருக்கு எதிராக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தனியார் கல்லூரியில் இன்று (மே 06) நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 'இந்த புத்தகம் ஒரு முக்கியமான ஆவணம். பயங்கரவாதத்திற்கு எதிரான வாதத்தை முன் வைக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதில் இந்திய ராணுவம் அதிக திறன் வாய்ந்துள்ளதாக விளங்குகிறது. மேலும் பல்வேறு நாடுகள் இந்தியா மீதான போரை நிகழ்த்தியுள்ளது. 1990ஆம் ஆண்டு நான் ராணுவத்தில் ஒரு பிரிவில் சேர்ந்த போது, பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்பது தினசரி வழக்கமான ஒன்றாக இருந்தது.
புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம்:அதேபோல், 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்பு, ராணுவத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. பயங்கரவாதத்தை எதிர்த்து சண்டையிடுவதில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டும் அனைவரும் பயங்கரவாதிகள் ஆவர். அதுமட்டுமின்றி இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்ட போது, ராணுவம் அதனை மிகவும் திறமையாக பாதுகாத்தது, அதற்கு மிகப்பெரிய நன்றிகள். புல்வாமா தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை நம்முடைய ராணுவத்தினர் திருப்பி வழங்கினர்.
கடந்த சில ஆண்டுகளாக நாடு அமைதியான முறையில் இருந்து வருகிறது. இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்த பிறகு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் அங்கு வரத் தொடங்கி உள்ளனர். இதற்கு முன்பு அங்கு பயங்கரவாதம் மட்டுமே ஓங்கி இருந்தது. ஆனால், தற்போது அதுபோன்ற சூழ்நிலை அங்கு இல்லை. இந்நிலையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம். இவர்கள் பல முகமூடிகளை அணிந்து கொண்டு நம் நாட்டில் இயங்கி வருகின்றனர். பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்’ எனவும் குற்றஞ்சாட்டினார்.
மக்களுக்கு சேவையாற்றும் இயக்கம்: இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஷேக் முகமது ஹன்சாரி, "பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய குற்றஞ்சாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். எங்கள் இயக்கம் வெளிப்படையாக, ஏழை எளிய மக்களுக்கு சேவையாற்றி வரக்கூடிய இயக்கம்.
புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கரோனா காலத்தில் எப்படி செயல்பட்டோம் என மக்களுக்குத் தெரியும். நாகலாந்தில் ஆளுநராக இருந்தபோது, மக்களால் துரத்தி அடிக்கப்பட்ட நபர்தான் ஆர்.என்.ரவி; ஆளுநர் பாஜகவிற்கும், ஆர்.எஸ்.எஸ்-க்கும் ஊது குழலாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய 18 மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார். மக்கள் எதிர்பார்க்கும் பேரறிவாளன் மற்றும் நீட் தேர்வு பிரச்னைகளை கிடப்பில் வைத்துள்ளார். தமிழ்நாடு மக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாக ஆளுநர் செயல்படுகிறார்.
ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா?திமுக பதவியேற்று ஓராண்டு ஆகியுள்ளது. தமிழ்நாடு அரசிற்கு கெட்டப்பெயர் எடுத்து தரவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆளுநர் செயல்படுகிறார். இப்படி மக்களுக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். வெறும் குற்றச்சாட்டு மட்டுமே வைக்கின்ற ஆளுநர், அதை ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா? எங்கள் இயக்கத்திற்கு எதிரான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். மக்களை நேரடியாக சந்திக்கக் கூடிய இயக்கம் நாங்கள். வன்மத்தைத் தூண்டும் விதமாக யார் செயல்படுகிறார் என்று மக்களுக்குத் தெரியும். நாங்கள் முகமூடி அணிய வேண்டிய அவசியமில்லை.
ஆளுநர் மாளிகை முற்றுகை: பாஜகவின் செயல் அலுவலராகவும், ஆர்.எஸ்.எஸ்சின் வாய்மொழியாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். அரசியல் விழாக்களில் ஆர்.எஸ்.எஸ் சேர்ந்தவர்களை அழைத்ததால்தான் ஆளுநர் விருந்தைப் பலர் புறக்கணித்தனர்.
ஆளுநரின் அனைத்து செயல்பாடுகளையும் கண்டித்து நாளை (மே 7) ஆளுநர் மாளிகை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு அரசு ஜனநாயக ரீதியாக இந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆளுநர் கூறியதற்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றோம்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:ஆளுநர் மீது தாக்குதலா? பொய்ப் பரப்புரை என்கிறார் கி.வீரமணி