சென்னை: அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்து நூறு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படாத ஒரே மாநிலம் தமிழ்நாடு என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை தெரிவித்தார்.
அர்ப்பணிப்புடன் பணிசெய்யும் மருத்துவர்கள்
அரசு மருத்துவர்களின் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளரிடம் பேசிய அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் பெருமாள் பிள்ளை, "கரோனா பேரிடர் காலத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவர்கள் ஓய்வின்றி பணியாற்றிவருகிறோம்.
கரோனாவால் மருத்துவர்கள் உயிரிழந்தபோதும் தன்னலமின்றி தொடர்ந்து அர்ப்பணிப்போடு பணியாற்றிவருகிறோம்.
முறையான ஊதிய உயர்வு தேவை
ஆனால் 2009ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட அரசாணை அடிப்படையில், 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு தருவதற்கு இதுவரை வழிவகை செய்யப்படவில்லை. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அரசுக்குக் கூடுதலாக ரூ.300 கோடி மட்டுமே தேவைப்படும்.
கர்நாடகாவில் கரோனா முதல் அலையின்போது மருத்துவர்களின் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட குறைவாகவே வழங்கப்படுகிறது.
தொற்றால் இறந்த மருத்துவர்; மனைவிக்கு அரசு வேலை கோரிக்கை
கரோனா பெருந்தொற்றில் பணியாற்றிய ஒன்பது மருத்துவர்கள் இறந்துள்ளனர். அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த விவேகானந்தன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
மேலும், அரசு மருத்துவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அழைத்துப் பேசி, அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, முதலமைச்சர் தங்களை நேரில் சந்தித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சருக்கு கோரிக்கை
நாங்கள் பிப்ரவரி 10ஆம் தேதி வைத்துள்ள உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்துவதற்கு முன்பே எங்கள் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றித் தருவார் என நம்புகிறோம்.
அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு குறித்து 100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் நிறைவேற்றித் தராத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்" என வருத்தத்துடன் தெரிவித்தார்.
அரசு மருத்துவர்கள் கோரிக்கைகள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை மேலும், பிப்ரவரி 10ஆம் தேதிக்கு முன்னர் முதலமைச்சர் தங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார் என நம்புவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: மதுரையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் - சு. வெங்கடேசன்