தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி முடிந்த பின்னர் 15 நாட்கள் மீண்டும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்த தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்கனவே அறிவுரை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் முதுநிலை மருத்துவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக் கூறி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து முதுகலை மருத்துவர்களை அழைத்துப் பேசிய மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், பாதுகாப்பு உபகரணங்களை அளிப்பதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முதுகலை மருத்துவர்கள் தாங்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவில்லை என விளக்கம் அளித்தனர்.
இந்த சூழலில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், முதுகலை மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் தனியாக தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.