சென்னை:தமிழ்நாட்டில் அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா லேப்டாப்கள் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. பல்வேறு மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் விரைந்து லேப்டாப்கள் வழங்க கோரிக்கை வைத்துவருகின்றனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை தரப்பில், கரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களின் விலை உயர்ந்துள்ளது. இதன்காரணமாக, லேப்டாப்களை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்கள், அதிகவிலைக்கு டெண்டர் கோருகின்றன.
தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய லேப்டாப்கள் மிக குறைந்த விலையில் தயாரிக்கப்படுபவை. இதனால் டெண்டர் எடுக்க நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனாலேயே இரண்டு ஆண்டுகளாக லேப்டாப்கள் வழங்கப்படவில்லை. இருப்பினும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் லேப்டாப்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.