சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி கூறுகையில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மூன்றாவது அலை சென்னையில் உச்சத்தை தொட்டுள்ளது.
ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் தற்போது தான் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜனவரி மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உச்சத்தை தொடும். அதன் பின்னர் வைரஸ் தொற்று குறையத் தொடங்கும்.
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பெரிய பாதிப்பில்லை
ஒமைக்ரான் வைரஸ் தொற்று, இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பினை அளிக்கவில்லை. வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன் பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி மத்திய அரசு, ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்படுபவர்களின் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டாமென தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகத் தெரிகிறது. ஆனால், இந்த வைரஸ் தொற்று பரவல் வேகம், டெல்டாவை விட நான்கைந்து மடங்கு அதிகமாக உள்ளது.
தடுப்பூசியில் வணிகம் இருக்கிறது எனக் கூறினால், அதைப் பற்றி கவலைப்படாமல் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசியை தயாரித்து வழங்க ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம்.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மக்கள் தொகை அடர்த்தியாக இருப்பதால் இங்கு பரவல் வேகம் அதிகமாக உள்ளது. மேலும், தொடர்ந்து பணிக்கு செல்ல வேண்டிய தேவை உள்ளதால் பரிசோதனை செய்வதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர் எனக் கூறினார்.
தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மைக்ரோ பயாலஜி துறைத்தலைவர் தேவசேனா கூறும்போது, ”ஒமைக்ரான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் தேவைப்படவில்லை.
மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாகவே உள்ளது. மூன்றாவது அலை சென்னையில் உச்சத்தை அடைந்து குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் பிற மாவட்டங்களில் தற்போது தான் பரவத் தொடங்கியுள்ளது. ஜனவரி இறுதியில் ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கிறோம், அதன் பின்னர் வேகமாக குறைந்து விடும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 30,000யை நெருங்கும் கரோனா தொற்று!