சென்னை: சைவ உணவகங்களில் மட்டுமே அரசுப்பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அசைவ உணவகங்களிலும் பேருந்துகளை நிறுத்தலாம் என போக்குவரத்துத் துறை தனது முந்தைய அறிவிப்பைத் திரும்பப் பெற்றுள்ளது.
அரசு போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிவிப்பில், 'பேருந்துகள் நிறுத்த உணவகத்திற்கான நிபந்தனைகளில் அசைவ உணவு என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையால் சர்ச்சை ஏற்பட்டது. இந்தச் சூழலில் அசைவ உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், போக்குவரத்துத்துறையின் செயல்பாடு ஒருவரது உணவு உரிமையில் தலையிடும் செயல் என எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அசைவ உணவுகளையும் சாப்பிட விரும்புவார்கள் என்பதால், புதிய அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விதிமுறைகள்: சாலையோர உணவகங்களுக்கு முப்பது நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில், ’உணவு வகைகள் தரம் மற்றும் சுவையுள்ளதாக இருக்க வேண்டும்; சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும்; கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும்; அவற்றை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; உணவகத்தில் இருந்து பேருந்து வெளியே வரும்போது நெடுஞ்சாலையில் வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும் வகையில் இடம் இருக்க வேண்டும்; பேருந்துகள் நின்று செல்வதற்கு போதிய இடவசதிகள் இருக்க வேண்டும்; பேருந்துகளை நிறுத்தும் இடத்தில் கான்கிரீட் அல்லது பேவர் பிளாக் போடப்பட்டிருக்க வேண்டும்; சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்’ எனப் பல்வேறு நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
உணவகத்தில் உணவுப் பொருள்களின் விலைப்பட்டியலை பயணிகளுக்குத் தெரியும்படி வைக்க வேண்டும். அனைத்துப் பொருள்களும் நியாயமான சில்லறை விலையை விட அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது. மேலும் போக்குவரத்துத்துறை வெளியிட்ட டெண்டர் அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் தரப்பில் கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து டெண்டர் விதியிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இதுவரை ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளெய்ம் பெறவில்லையா..? இது உங்களுக்குதான்!!