கோயம்புத்தூர்: நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதற்கு கைது செய்யப்பட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாஜக சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட சென்னையைச் சேர்த்த பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து இஸ்லாமியக் கூட்டமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில், கடந்த ஜனவரி 31ஆம் தேதி கல்யாணராமன், மேட்டுப்பாளையம், காட்டூரைச் சேர்ந்த சதீஷ்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி இருவரும் கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதி அளிக்குமாறு கோயம்புத்தூர் எஸ்பி பரிந்துறை செய்ததை தொடர்ந்து, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.