தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 600 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சென்னையில் கரோனா பாதிப்பு அதிதீவிரமடைந்துள்ளது. நேற்று (மே 8,2020) ஒரே நாளில் மட்டும் இங்கு 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,043ஆக அதிகரித்துள்ளது. இந்த நோய் பரவலைத் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பெரிய அளவில் பலன் ஒன்றும் இல்லை.
கோடம்பாக்கத்தில் கரோனா: சென்னை மாநகராட்சி வெளியிட்ட மே 4ஆம் தேதி விவரம்! இதில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 546 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மண்டலத்தில் கரோனா நோய் தொற்று கடந்த ஐந்து நாள்களில் மட்டும் இருமடங்காக அதிகரித்துள்ளது. மாநகராட்சி வெளியிட்ட மே 4ஆம் தேதி தகவலின் படி, 257 ஆக இருந்த கரோனா தொற்று, கோடம்பாக்கம் மண்டலத்தில் தற்போது இருமடங்காகி 546 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்கு உள்ளான பெரும்பாலானோர் அருகேயுள்ள கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருப்பவர்கள் எனக் கூறப்படுகிறது. அதனாலேயே இப்பகுதியில் தொற்றின் தாக்கம் அதிகமாகியுள்ளதாகவும் பேசப்படுகிறது.
கோடம்பாக்கத்தில் கரோனா: சென்னை மாநகராட்சி வெளியிட்ட (இன்று) மே 9 ஆம் தேதி விவரம்! சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய இடங்களில்தான், மிக அதிகமாக நோய் தொற்று உறுதியானது. தற்போது ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பரவல் குறைந்து வரும் நிலையில், கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே கரோனா அச்சத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19: விடை கிடைக்காத ஏராளமான வினாக்கள்! பதில் தேடும் சிறப்புத் தொகுப்பு...