தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சினிமா டூ அரசியல்: எம்.ஜி.ஆரின் மேஜிக்கை நிகழ்த்துவாரா ரஜினிகாந்த்? - ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு

அரசியல் மற்றும் சினிமா, இவை இரண்டும் பிரிக்கமுடியாத இணைகளாக தமிழ்நாட்டில் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன. தமிழ் திரை உலகம் பல அரசியல் முகங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு தந்திருந்தாலும், முதல்முதலாக எம்.ஜி.ஆர்தான் திரை கலைஞராக இருந்து கட்சி ஒன்றை தொடங்கி முதலமைச்சர் நாற்காலியையும் கைப்பற்றினார். தற்போது திரை உலக ஜம்பாவானான ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், எம்.ஜி.ஆருடன் ரஜினியை ஒப்பிட்டு சில வலதுசாரி அரசியல் நோக்கர்கள் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். இருவரும் திரை உலகில் நீண்ட காலம் கோலாச்சிய நிலையில், ஒருவர் அரசியலிலும் வெற்றி கண்டுள்ளார். மற்றொருவரோ தற்போதுதான் தனது பிரவேசத்தை அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

By

Published : Dec 9, 2020, 8:56 PM IST

சென்னை: நீண்ட தயக்கத்துக்குப்பின் தனது அரசியல் பிரவேசத்தை ரஜினி உறுதி செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எம்.ஜி.ஆரின் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்திக்காட்டுவார் எனவும் பேச்சுக்கள் அடிபடத்தொடங்கியுள்ளன. ரஜினியும் எம்.ஜி.ஆர். போன்று வெகுஜன மக்களின் அபிமானம் பெற்ற நடிகர். அதேவேளை, திரைவெற்றியும் அதன் கவர்ச்சி மட்டுமே அரசியல் வெற்றியை சாத்தியபடுத்துமா என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது.

1972ஆம் ஆண்டில் திமுகவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். அதிமுக கட்சியை நிறுவினார். அதன் பின்னர் பல்வேறு திரைமுகங்கள் அரசியலில் தொடர் பிரவேசம் மேற்கொண்டுவருகின்றனர். இந்தப்பட்டியலில், எம்.ஜி.ஆருடன் பல படங்களில் இணையாக நடித்து மக்கள் ஆதரவை பெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே வெற்றியை ருசிக்க முடிந்தது.

மற்றொரு உச்ச நட்சத்திரமான சிவாஜி, காங்கிரஸ் கட்சியுடன் முரண் ஏற்பட்டு தனித்து அரசியில் களம் கண்டபோது பெரும் தோல்வியையே சந்தித்தார். இந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி மக்களவைத் தேர்தலில் களம் கண்டார் கமல் ஹாசன். தற்போது அவரது திரையுலக சகாவான ரஜினிகாந்தும் வரும் புத்தாண்டில் புதிய கட்சிக்கான அறிவிப்பு வரும் என கூறி களத்தில் சேர்ந்துள்ளார்.

ரஜினி வருகையை எம்.ஜி.ஆரின் அரசியலுடன் ஒப்பிடுவது ஆளும் அதிமுகவுக்கு உவப்பான ஒன்றாக இருக்காது. அதிமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, கடவுளுக்கு நிகராக நினைக்கும் தங்களது தலைவருடன் வேறு ஒருவரை ஒப்பிடுவது மனதிற்கு ஏற்கமுடியாத விஷயமாகும். அதிமுகவினர் இந்த ஒப்பீட்டை முற்றாக நிரகாரிக்கும் நிலையில், அதன் எதிர் துருவமான திமுகவும் இதை விரும்பவில்லை.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.

ஆர்.எஸ்.எஸ் கருத்தியலாரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி, ரஜினியின் அரசியல் பிரவேசம் எம்.ஜி.ஆருக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். ரஜினியின் ஆளுமை அவரது திரைக்கவர்ச்சியையும் தாண்டியது என்பது குருமூர்த்தியின் கருத்து. ரஜினியை மக்கள் வெறும் திரை நடிகராக பார்ப்பதில்லை. அவரை நேர்மையானவர், நல்லெண்ணம் கொண்டவர், சாதிகளைக் கடந்தவர், மாற்றத்திற்கான சக்தி என மக்கள் பார்ப்பதாக குருமூர்த்தி கூறுகிறார்.

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தற்போதைய அரசியல் களம் வெற்றிடத்தை கண்டுள்ளது. இந்த சூழலில் ரஜினி கொண்டுவரும் மாற்றம் வலுவானதாக இருக்கும். ரஜினி வெற்றிடத்தை நிரப்பும் நபராக மட்டும் இருக்க போவதில்லை. கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவைப் போல எல்லைகளை கடந்த தனித்துவமானத் தலைவராக ரஜினி உருவெடுப்பார் என்று கூறும் குருமூர்த்தி, தேசியவாத சிந்தனைகளின் மையமாக ரஜினி இருக்கப்போவதாக குறிப்பிடுகிறார்.

அதேவேளை, ரஜினி வருகையின் தாக்கம் குறித்து சந்தேகத்துடன் கூடிய மாற்று கருத்துகள் அரசியல் களத்தில் பேசப்படுகிறது. திராவிட அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட எம்.எஸ்.எஸ் பாண்டியன், எம்.ஜி.ஆரை ஒரு ” பேராற்றல் "என்கிறார்.

தனது The Image Trap என்ற நூலில், எம்.ஜி.ஆர் எவ்வாறு ஒரே நேரத்தில் நடிப்பு மற்றும் அரசியல் இரண்டையும் திறம்பட கையாண்டார் என்பதை விரிவாக அவர் கூறியுள்ளார்.

திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினி

லோக் நீதி அமைப்பின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளரான பி.ராமஜெயம், சிரஞ்ஜீவிக்கு காப்பு(Kapu) சமுதாயம் போன்றோ, விஜயகாந்த்க்கு நாயுடு சமுதாயம் போன்றோ வாக்குவங்கி சமூக பின்னணி ஏதும் இல்லை என்கிறார். எம்.ஜி.ஆருக்கு தென்தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான தேவர் சமுதாயம் கட்சித் தொடங்கியபோது ஆதரவு கரம் நீட்டியது. பின்னர் மேற்கு மாவட்டங்களின் மற்றொரு பெரும்பான்மை சமுதாயமான கவுண்டர் சமுதாயம் பலமான வாக்கு வங்கியாக சேர்ந்துகொண்டது. இதுபோன்ற பின்னணி ரஜினிகாந்துக்கு இல்லை என்கிறார் ராமஜெயம்.

திரையுலகம் எம்.ஜி.ஆருக்கு அசாதாரண பிம்பத்தை ஏற்படுத்தி கொடுத்தாலும் அதை தனது ஆரம்பகட்ட அரசியலில் நயம்பட கையகப்படுத்தியதாக ஹைதரபாத் பல்கலைகழகத்தின் சமூகவியல் பேராசிரியரான ஆர்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். தனது திரை கவர்ச்சியை வைத்து திமுகவின் முகமாக உருவெடுக்கத்தொடங்கி பின்னர் சட்டமன்ற உறுப்பினராவும், பின்னாளில் பொருளாளராகவும் படிப்படியாக உயர்வுகண்டார். அரசியல் இயல்பாகவே அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்றாக இருந்துள்ளது.

இந்த சூழலில் ரஜினியை எம்.ஜி.ஆரை ஒப்பிடுவது தவறான ஒன்றாகவும். இதுவரை ரஜினியின் பலம் பரிசோதிக்கபடாத நிலையில், கடந்த காலத்திலிருந்து தமிழ்நாடும் பல்வேறு உருமாற்றங்களை கண்டுள்ளது. நவீன சமூகத்தின் அரசியலை முன்னிறுத்தாத ரஜினிக்கு தமிழ்நாட்டின் லிபரல் ஜனநாயத்தன்மை குறித்த புரிதல் இல்லை. ஆட்சிக்கு எதிராக இருக்கும் மனநிலை குறித்தோ, மாற்றத்தின் சக்தியாகவோ ரஜினி தன்னை பிரகடனம் செய்துகொள்ளவில்லை என்கிறார் திருநாவுக்கரசு.

எம்.சி.ராஜன், தலைவர், ஈடிவி பாரத் சென்னை பியூரோ

ABOUT THE AUTHOR

...view details