சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிக அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள். இதில் கவனிக்கப்பட வேண்டியவையாக கல்லூரி மாணவர்களுக்கு இவற்றை விற்பனை செய்யும்போதுதான் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் பிடிபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே கஞ்சா, மது போன்ற போதை பொருட்களுக்கு வயது வித்தியாசமின்றி சிறுவர்களும், இளைஞர்களும் அடிமையாகி வகிறார்கள் என்றும், இதனால் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதுடன், மாநிலத்திலுள்ள இளைஞர்கள் மேம்பாடும் மறைமுகமாக குறைந்து வருகிறது என காவல்துறை அலுவலர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவித்து வந்தனர்.
இது போன்ற பாதிப்புகளில் இருந்து இளைஞர்களை மீட்க என்ன செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அழகுசுந்தரம் கூறுகையில், ‘போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த காவல்துறையில் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களுக்கான தண்டனைகள் அவர்கள் வைத்திருந்த போதைப்பொருளின் அளவைக் கொண்டே காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்வதால், இது போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்கிறது. இதனை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றால் அதற்கான தீர்வு, போதைப் பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு பிணையில்லா சிறை தண்டனை வழங்க வேண்டும்’ என்றார்.
பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சா இளைஞர்கள் நிலை இப்படி இருக்க இன்று சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தின் பின்புறத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநிலம் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த கோரிபாடி ராம்பாபு, சிந்தகாயலு சீனு, போலிஜி, லட்சுமி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.