தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை ஐஐடியில் தலைதூக்குகிறது சாதிய பாகுபாடு? - ஐஐடி முன்னாள் மாணவர்

தமிழ்நாட்டில் சமூக நீதி குறித்து பேசும் திராவிடக் கட்சிகள், சென்னை ஐஐடியில் நடந்துவரும் சாதிய பாகுபாடு விவகாரத்தில் தகுந்த நடவடிக்கையை எடுக்க முன்வர வேண்டும் என, ஐஐடி மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் முரளிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

IIT
IIT

By

Published : Jul 2, 2021, 5:40 PM IST

சென்னை:சென்னை ஐஐடியில் நடந்துவரும் சாதிய பாகுபாடுகளை களைய மாநில அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி), கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் பேராசிரியர்கள் பணி நியமனத்திற்காக எவ்வித விளம்பர அறிவிப்பும் இல்லாமல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அவற்றின் மூலம் 414 பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. பட்டியலினத்தவர்கள் (எஸ்சி, எஸ்டி) பிரிவில் இருந்து 12 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

அதேபோன்று பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் இருந்து 39 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.

பொதுப் பிரிவில் 86.9 சதவீதம்

பிற வகுப்பினரிலிருந்து 375 பேர் பேராசிரியர், உதவிப் பேராசிரியராகப் பணியில் நியமனம் செய்யப்பட்டனர். அதேபோன்று சென்னை ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் குறித்து விபரம், கடந்த 2020 டிசம்பரில் பெற்றப்பட்டது.

பேராசியர்கள் நியமன பட்டியல்

அதில் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என 539 பேர் பணியாற்றி வருகின்றனர் எனவும், அவர்களில் எஸ்சி பிரிவில் 15 பேரும், எஸ்டி பிரிவில் 2 பேரும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 61 பேரும், பொதுப் பிரிவில் 515 பேரும் பணியில் உள்ளனர்.

அதாவது 86.9 சதவீதம் பேர் பொதுப் பிரிவில் இருந்து பணிக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை ஐஐடியில் மானுடவியல் துறையில் பொருளாதார உதவிப் பேராசிரியராக விபின்.பி வீட்டில் (விபின் புதியதாட் வீட்டில்) கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச்சில் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

உதவிப் பேராசிரியர் ராஜினாமா

இவர், சென்னை ஐஐடியில் நிலவும் சாதிய பாகுபாடு குறித்து தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின நல ஆணைய உறுப்பினர்கள் உள்ளடங்கிய விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி, தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

பேராசியர்கள் நியமன பட்டியல்

இதுதொடர்பாக சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரும், மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான முரளிதரன், ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில, " சென்னை ஐஐடி தொடங்கிய நாளில் இருந்து சாதிய பாகுபாடு, வன்கொடுமைகள் நடந்து வருகின்றன.

கடந்த 1990 ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் தொடங்கிய நாளில் இருந்து அதிகளவில் சாதிய பாகுபாடு, வன்கொடுமைகள் நடந்து வருகின்றன.

இதற்கு காரணம் ஐஐடியில் இருந்த பேராசிரியர்கள், முதல்வர்களாக நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டனர். ஐஐடியின் விதிகளின்படி, பேராசிரியர்கள் முதல்வராக, அதே நிறுவனத்தில் பணிக்கு வர முடியாது.

சென்னை ஐஐடியில் 86 சதவீதம் உயர் சாதியை சேர்ந்தவர்கள் தான் பேராசிரியர்களாக இருக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் விதிகளை மீறி பணியில் இருக்கின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டுமெனில் எஸ்சி அல்லது ஓபிசி பிரிவில் இருந்து ஒருவர் முதல்வராக வந்தால் மட்டுமே முடியும்.

ஐஐடி முன்னாள் மாணவர் முரளிதரன்

ஆனால் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வருவதில்லை எனக் கூறுகின்றனர். விண்ணப்பங்கள் வந்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இதுதொடர்பாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளேன்.

அவர்களும், எனது மனுவை ஏற்றுக் கொண்டுள்ளனர். பொது முடக்கத்தால் தற்போது எந்தப் பணிகளும் நடக்கவில்லை. தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் உறுப்பினர், சென்னை ஐஐடியில் ஆய்வு செய்து, எஸ்சி,எஸ்டி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

ஆனால், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஐஐடியின் முதல்வர், தன்னை எதுவும் கூற முடியாது என்ற எண்ணத்தில் உள்ளார்.

எனவே நாடாளுமன்றத்தில் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குரலெழுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் விண்ணப்பித்தாலும், அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

ஐஐடி முன்னாள் மாணவர் முரளிதரன்

ஆகையால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, ஏற்கனவே உள்ள பின்னடைவு பணியிடங்களுக்கு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் குரலெழுப்ப வேண்டும்

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும், அதற்கு தகுந்த தீர்வு கிடைப்பதில்லை. பெரியார், அம்பேத்கர் குறித்து பேசும் அரசியல்வாதிகள், சமூக நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அதிகளவில் இருந்தால், குறைவாகவுள்ள பிரிவினருக்கு மன ரீதியான தாக்குதல் கொடுக்கத்தான் செய்வார்கள்.

ஏற்கனவே வசந்தா கந்தசாமி என்பவருக்கும் பதவி உயர்வில் பிரச்சனை செய்தனர். அதனைத் தொடர்ந்து விபின் பி.வீட்டிலும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குடியரசுத் தலைவர், பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் கடிதம் எழுதி உள்ளேன்.

ஆனால், அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொது முடக்கத்தின்போது சமூகத்திற்கு பயனுள்ள கண்டுபிடிப்பும் செய்யவில்லை.

ஐஐடியில் தற்போதுள்ள முதல்வர் பாஸ்கர் ராமமூர்த்தி, வரும் செப்டம்பருடன் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், புதியதாகப் பணிக்கு ஆட்களை ஆன்லைன் மூலமாகத் தேர்வு செய்கிறார்.

குருப்-1 நிலையில் உள்ளவர்களை ஆன்லைன் மூலம் தேர்வு செய்வது, சரியாக இருக்காது. மேலும் அந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவில்லை எனக் கூறுகிறார். விண்ணப்பங்கள் வந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன.

சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு, வன்கொடுமை நடப்பதற்கு உதாரணமாக விபின் பி.வீட்டில் எழுதிய கடிதம் உள்ளது. சமூக நீதி குறித்து பேசுபவர்கள், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

ஐஐடி முன்னாள் மாணவர் முரளிதரன்

மூன்றாவது முறை முயற்சிக்கிறார்

ஐஐடியின் முதல்வர் பதவியில் ஏற்கனவே 2 முறை இருந்த பாஸ்கர் ராமமூர்த்தி, 3வது முறையும் அதேப் பதவியில் அமர முயற்சிக்கிறார். மத்திய அரசு கூறுவது போல் இட ஒதுக்கீடு அளிக்காமல் இருப்பதால், அவருக்கு மீண்டும் பதவி வழங்குவார்கள்.

மேற்கு வங்களாத்தில் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாமல் இருக்க முடியுமா? அங்குள்ள முதலமைச்சர், அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பாரா?

சமூக நீதி குறித்து பேசிய திராவிட கட்சிகள், தற்பொழுது ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். இதுதொடர்பாக வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கையை எடுக்க அரசு முன் வர வேண்டும். சட்டப்படி தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிக்கலாமே: சென்னை ஐஐடியில் தொடரும் சாதிய பாகுபாடு; பணியிலிருந்து விலகிய உதவிப் பேராசிரியர்!

ABOUT THE AUTHOR

...view details