சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைப்பதும், கொள்ளை அடிப்பதுமே இவரது பிரதான தொழிலாக இருந்து வந்தது. இதுவரை சுமார் 100 சவரன் நகைகளுக்கு மேல் கொள்ளையடித்துள்ள கமலக்கண்ணன், 5 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், திடீரென திருந்தி வாழ வாய்ப்பு கொடுக்கும் படி கடந்தாண்டு காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்தார். அப்போது, 6 மாதத்திற்கு முன்பு கலா என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது கொள்ளையடிப்பதை விட்டு விட்டு ஆட்டோ ஓட்டுவதாகவும் கூறியுள்ளார்.
அதன்படியே, மனந்திருந்தி வாழ்ந்து வந்த கமலக்கண்ணனின் வாழ்க்கைப் பாதையில், கரோனாவால் போடப்பட்ட ஊரடங்கு அணையை போட்டுள்ளது. ஆட்டோ ஓட்ட முடியாததால் வருமானமின்றி, குடும்பத்தை எப்படி கொண்டு செல்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நின்றுள்ளார். அப்போதுதான் அந்த முடிவை எடுத்தார் கமலக்கண்ணன்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி அவதிப்பட்ட அவர், வேறொரு தொழிலை செய்ய முடிவு செய்தார். ஆட்டோ ஓட்டி சேமித்து வைத்திருந்த 8 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து, சொந்தமாக நூல் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை வாங்கினார். அத்தொழிலை நன்கு கற்றுக் கொண்டு மீண்டும் சம்பாதிக்க தொடங்கி விட்டார் கமலக்கண்ணன்.