தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நில அபகரிப்பு வழக்கில் கைதான ஜெயக்குமார் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

By

Published : Mar 4, 2022, 8:24 PM IST

சென்னை: துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமைத் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்னை இருந்துவந்தது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மீண்டும் மனு தாக்கல்

இந்த நிலையில், ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், 'தனது மருமகன் நவீன்குமாரும், அவரது சகோதரர் மகேஷும் பங்குதாரர்களாக உள்ள மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவன நிர்வாகத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டார்.

இதுதொடர்பான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, எவ்விதத் தொடர்பும் இல்லாத, தன்னை கைது செய்துள்ளனர்' என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த மகேஷ் குமாரின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத் தன்னை வழக்கில் தவறாக இணைத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சரான தனது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் நோக்குடன் பதிவான வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டுமென நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பொ.மல்லாபுரம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக - விசிக தொண்டர்கள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details