முன்னாள் நீதிபதியான கர்ணன், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அவமதித்து பேசியதாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ததால், கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அண்மையில் கர்ணன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. அதில் அவர், உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து பேசிய விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினருக்கு ஆன்லைன் மூலமாக புகார்கள் வந்தன. அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவினர், வீடியோவை ஆய்வு செய்து நீதிபதி கர்ணன் மீது 159 (கலவரத்தை துாண்டுதல்), 509 (பெண்களை அவமதித்தல்) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு விசாரணைக்கு வரும்படி, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் நேற்று அழைப்பாணை அனுப்பினர். அதன்படி இன்று காலை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில், கர்ணன் நேரில் ஆஜரானார். அவரிடம் நடத்தப்பட்ட நீண்ட நேர விசாரணையில், தான் கூறிய கருத்துகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும், அதை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும் என அவர் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நேரில் ஆஜராக நேரிடும் - உயர் நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை!