சென்னை: மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் நிம்மகெளடா. இவர் ரயில்வே ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இவரது மகன் ராகுல் நிம்மகெளடா. இவர்களது குடும்ப நண்பரான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகிரி பாலன் என்பவர், தற்போது ஆம்னி பேருந்து வைத்து தொழில் நடத்திவருகிறார்.
மேலும், அழகிரி பாலன் மத்திய கமாண்டோ படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு தொழில் நடத்திவந்துள்ளார். கமாண்டோ படை வீரராக இருந்தபோது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
பணம் மோசடி செய்த முன்னாள் படை வீரர்
இந்நிலையில் தனது குடும்ப நண்பரான சீனிவாசன் நிம்மகெளடாவிடம், "தலைமைச் செயலகத்தில் எனக்குத் தெரிந்த அலுவலர்கள் இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் 'மக்கள் தொடர்பு உதவி அலுவலர்' பதவி காலியாக இருக்கிறது.
அலுவலர்களுக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த வேலையை உங்கள் மகனுக்கு வாங்கித் தருகிறேன்" என்று அழகிரி பாலன் உறுதியளித்துள்ளார். இதனை நம்பிய சீனிவாசன் நிம்மகெளடா, அவரது மகன் ஐந்து தவணைகளாக ரூ.51 லட்சத்தைப் பணமாகவும், காசோலையாகவும் வழங்கியுள்ளனர்.