சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் காடுகளின் பரப்பளவை தற்போதுள்ள 23.8 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக உயர்த்துவது தமிழ்நாடு அரசின் தொலை நோக்கு திட்டமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் பெரும்பாலான காடுகள் வெவ்வேறு காரணங்களால் அழிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
மேலும் இதே நிலை தொடர்ந்தால் வரும் காலங்களில் வெப்பத்தாக்கம் அதிகமாகியும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்தும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டும் பெரும்பாலான மக்கள் சுற்றுச்சூழல் அகதிகளாக (environmental refugees) மாறி வெவ்வேறு இடங்களுக்கு புலம்பெயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காடுகள் மற்றும் மரங்கள் பல்வேறு வழிகளில் அழிகின்றன. காட்டுத்தீ, அடர்த்தியான காடுகளுக்கு இடையில் சாலை போடுதல், சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட்டுதல், காடுகளை விளைநிலங்களாகவோ அல்லது கட்டடங்களாகவோ மாற்றுதல், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சாலையோரங்களில் உள்ள பழமையான மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன. ஒரு புறம் காடு வளர்ப்பு (afforestation) என்ற பெயரில் மரங்களை நட்டாலும், மறுபுறம் காடுகள் அழிப்பு (deforestation) நடந்து கொண்டுதான் இருக்கிறது.
காடுகளின் பரப்பளவை எப்படி உயர்த்துவது?:உதகை அரசு கல்லூரியின் வனவிலங்கு - உயிரியல் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் பா.ராமகிருஷ்ணன், கூறுகையில், "ஒரு கால கட்டத்தில் ஒரு சில காரணங்களுக்காக வெளிநாட்டு செடிகள் கொண்டுவரப்பட்டன. உதாரணமாக யூகலிப்டஸ் (தைல மரம்) தண்ணீரை உறிஞ்சுவதற்காக கொண்டுவரப்பட்டது.
காடுகள் அழிப்பால் பெரும்பாலான மக்கள் சுற்றுச்சூழல் அகதிகளாக மாறக்கூடும் சதுப்பு நிலங்கள் மற்றும் விளை நிலப்பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் இருந்தால், இந்த மரங்கள் தண்ணீரை உறிஞ்சும். மற்றொரு மரமான சீமைக் கருவேலம் எரிப்பதற்காக நடப்பட்டது.
ஆனால், இந்த மரங்கள் தற்போது காட்டுத்தீ போல பரவியுள்ளது", எனத் தெரிவித்த அவர் வெளிநாட்டுச் செடிகளை கண்டறிந்து அவைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; மேலும் உள்நாட்டுச் செடிகள் பல்லுயிர் தன்மையை காக்கும் தன்மை கொண்டதால் அவைகளை பெருமளவில் நட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
காடுகளின் பரப்பளவு குறைந்தால் தாக்கம் என்ன?:வனவிலங்கு ஆராய்ச்சியாளர், கொ. அசோக சக்கரவர்த்தி கூறுகையில், "காடுகள் அழிப்பு இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் நிகழ்கிறது. இதன்மூலம் காடுகளின் பரப்பளவு கணிசமாக குறைந்து வருகிறது. குறிப்பாக சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலைகளின் ஓரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன.
அதிகளவில் மரங்கள் மற்றும் காடுகள் இருந்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது", எனக் குறிப்பிட்டார். மேலும் அதிகளவில் மரங்கள் இருக்கும்போது மனிதர்களும் வனவிலங்குகளும் நல்ல காற்றை சுவாசித்து உயிர் வாழ முடியும். எனவே, மரங்களையும் காடுகளையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
"இந்த ஆண்டு கோடைகாலத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் தாக்கியது. இதற்கு முக்கியக்காரணம் குறைவான மரங்களும் காடுகளும்தான். இந்த நிலை தொடருமானால், தமிழ்நாடு அடுத்து வரும் 10 ஆண்டுகளில் பாலைவனமாக மாற வாய்ப்புள்ளது.
மேலும் வெப்பத்தாக்கம் அதிகமாகியும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்தும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் சுற்றுச்சூழல் அகதிகளாக மாற்றப்படுவர்” எனத் தெரிவித்த சக்கரவர்த்தி, அரசு இதனை பெரிய எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மரங்களை வெட்டாமல் அதிக மரங்களை நட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக அடுத்த 10 ஆண்டுகளில் காடுகளின் பரப்பளவை 33 விழுக்காடாக உயர்த்த மரங்கள் நடப்பட்டு வருகின்றன. மேலும் மரங்கள் வெட்டப்படுவதை வனத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது" என்றார்.
குறிப்பாக காப்புக்காடுகள், விலங்குகள், காப்பகங்கள், சரணாலயங்கள் உள்ளிட்டப் பகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என்றார். வரும் 10 ஆண்டுகளில் 260 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நடவு செய்ய திட்டம் வகுத்துள்ளதாகவும் இதை செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கவும் குழு தொடங்கப்படவுள்ளது என ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறிவது எப்படி..? - சிறப்பு தொகுப்பு