உணவு பொருள்களில் கலப்படத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் ஈ டிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "பொதுவாக மக்கள் அனைத்து உணவுப் பொருட்களிலும் கலப்படம் உள்ளதாக நினைக்கிறார்கள், ஆனால் அப்படி நடைபெறுவது இல்லை, சில பொருட்களில் மட்டுமே கலப்படம் நடைபெறுகிறது.
குறிப்பாக சொல்லப்போனால் நாம் அத்தியாவசிய பொருளாக தினம்தோறும் பயன்படுத்த கூடிய பொருள்களில் கலப்படம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில வியாபாரிகள் மட்டுமே கலப்படத்தை செய்து அதிகம் லாபம் பார்க்கின்றனர். இவ்வாறு கலப்படம் மேற்கொள்ளும் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கையை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை எடுத்து வருகிறது. உணவுப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு தேவை என்றார். இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே இருந்தால் உடல் நலத்தை பார்த்துக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
பச்சை பட்டாணியில் கலப்படம் :பொதுமக்கள் நன்றாக பச்சை நிறமாக உள்ள பட்டாணியை வாங்க வேண்டாம். ஏனெனில் அதில் சாயம் பூசப்பட்டு இருக்கலாம். இதை கண்டறிய ஒரு டம்ளரில் கலப்படம் செய்யப்பட்ட பச்சை பட்டாணியை போட்டால், தண்ணீரில் பச்சை நிறத்தை வெளிக் கொண்டு வரும். இதிலிருந்து நாம் சாயம் பூசப்பட்ட பச்சைப் பட்டாணியை வாங்கக்கூடாது என்று தெரிகிறது.
வாழைப்பழம் :ஒரு சில வியாபாரிகள் வாழைப்பழத்தை பழுக்க வைக்க சில ரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். வாழைக்காயில் ரசாயனத்தை தெளித்துவிடுகிறார்கள். இதன் காரணமாக இரண்டு நாட்களில் பழுக்க வேண்டிய வாழைப்பழம் ஒரு சில மணி நேரங்களில் பழுக்கிறது. மேலும் இந்த வாழைப்பழத்தை வாங்கும்போது அதன் காம்பு பகுதி பச்சை நிறமாக இருந்தால் வாழைப்பழத்தை வாங்கலாம். வாழைப்பழம் பழுத்தாலும் காம்பின் நிறம் மாறாது.
ஆப்பிள் :குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழமாக ஆப்பிள் உள்ளது. இந்த பழத்தின் மீது மெழுகினை பூசி ஒரு சில வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். ஆப்பிள் வாங்கும் போது விரல்களால் சுரண்டிப் பார்த்தால் மெழுகின் படிமண் காணப்படும். இப்படி இருக்கும் பழங்களை வாங்க வேண்டாம். மேலும் பழங்களை வாங்கி உண்ணும் போது கழுவி பயன்படுத்த வேண்டும்.
தர்பூசணி:தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், தர்பூசணி உள்ளிட்ட கோடைக்கால பழங்களில் வியாபாரம் அதிகரித்து உள்ளது. தர்பூசணி வாங்கும் போதும் மிகவும் சிவப்பாக இருக்கின்ற பழங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் அந்த பழங்களை சிவப்பாக வைக்க வேண்டுமென்று ஊசி மூலம் ரசாயனம் ஏற்றப்படுகிறது. தர்பூசணி வாங்கும்போது வெள்ளை துணியால் அதனைத் தொட்டுப் பார்த்தால் அந்த ரசாயனத்தின் படிமம் அந்தத் துணியில் காணப்படும்.