நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான முன்னுரிமை திட்ட நிதியத்தில் இருந்து அமைச்சர் தங்கமணியின் தொகுதியான குமாரபாளையம் தொகுதிக்கு மட்டும், 20 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், உள்கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டி, அனிமூர் ஊராட்சி தலைவர் தாமரைச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, பணிகளுக்கான டெண்டர் விவரங்களை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
இந்த ஆவணங்களை மேற்கோள் காட்டிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சில பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்ட தேதியிலேயே பணிகள் ஒதுக்கி அவசரமாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், 95 சதவீத நிதியை அமைச்சரின் தொகுதிக்கு மட்டும் ஒதுக்கி விட்டால் மீதமுள்ள தொகுதி மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா எனவும் வினவினார்.