பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது! - விமான நிலையத்தில் ஒருவர் கைது
சென்னை: பண மோசடி வழக்கில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் மலேசியாவிலிருந்து விமானத்தில் வந்தபோது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தைச் சோ்ந்த சபீப்சாகீத் (28) என்பவா் வேலைவாங்கி தருவதாகச் சிலரிடம் பணம் மோசடி செய்ததாக ஹைதராபாத் மாநகர காவல் துறை கடந்த 2014ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில், அவர் கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தாா்.
இதற்கிடையே அந்நபர் வெளிநாட்டிற்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹைதராபாத் காவல் ஆணையர் சபீப்சாகீத்தை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா். அதோடு அனைத்து சா்வதேச விமானநிலையங்களும் சபீப்சாகீத் மீது எல்ஓசி (LOC) போட்டுவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் நேற்று (ஏப்ரல் 01) இரவு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்த பயணிகள் பாஸ்போா்ட், ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையிட்டனா்.
அந்த விமானத்தில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சபீப்சாகீத்தும் வந்தாா். இவர் தலைமறைவு குற்றவாளி என்பதை கண்டுபிடித்த குடியுரிமை அலுவலர்கள், அந்நபரை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு ஹைதராபாத் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனா். ஹைதராபாத் காவல் துறையின் தனிப்படையினா் சபீப்சாகீத்தை கைது செய்து அழைத்து செல்ல சென்னை வருவதாகக் கூறப்படுகிறது.