திருவள்ளூர் மாவட்டம் அகரம் கண்டிகையைச் சேர்ந்த விவசாயி கார்த்திக், தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனைக்காக சந்தைக்கு எடுத்து வந்துள்ளார். அப்போது, வெங்கல் காவல்துறை ஆய்வாளர் காய்கறிகளை சந்தைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்காததால், யாருக்கும் இனி பயன்படாத காய்கறிகளை விவசாயி கார்த்திக் சாலையில் கொட்டினார்.
இதையடுத்து, காவல்துறையினர் கார்த்திக்கை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காய்கறிகள் கொட்டப்படும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார். இதையறிந்த திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், பாதிக்கப்பட்ட விவசாயி கார்த்திக் இல்லத்திற்கு ஆய்வாளருடன் சென்று வருத்தம் தெரிவித்ததோடு, அப்துல் கலாமின் புத்தகத்தையும் பரிசாக வழங்கினார்.