தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக எம்பியின் முந்திரி ஆலை தொழிலாளி மரணம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கடலூர் முந்திரி ஏற்றுமதி நிறுவன தொழிலாளி கோவிந்தராசுவின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் உடற்கூராய்வுப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மரண வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல்செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜிப்மர் மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்ய உத்தரவு
ஜிப்மர் மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்ய உத்தரவு

By

Published : Sep 22, 2021, 3:26 PM IST

Updated : Sep 22, 2021, 4:02 PM IST

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி. ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றிவந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த தொழிலாளர் கோவிந்தராசு சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார்.

இது குறித்து கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் தொடர்ந்த வழக்கில், "செப்டம்பர் 19ஆம் தேதி வேலைக்குச் சென்று வீடு திரும்பாத எனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. திமுக எம்.பி. ரமேஷ், அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும்தான் மரணத்திற்குக் காரணம்.

மரணத்தில் சந்தேகம்

எனது தந்தையின் உடலில் பல ரத்த காயங்கள், அடித்து துன்புறுத்திய அடையாளங்கள் இருந்தன. எனது தந்தை கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ்தான் காரணம். மேலும் எனது தந்தையின் மரணத்தை உரிய முறையில் காவல் துறை விசாரிக்கவில்லை.

எனவே எனது தந்தையின் மரணம் தொடர்பான காடாம்புலியூர் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் செந்தில்வேல் கோரிக்கைவைத்துள்ளார்.

ஜிப்மர் மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்ய வேண்டும்

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் உடலை அங்குள்ள மூன்று மருத்துவர்கள் மூலம் உடற்கூராய்வு செய்யவும், அதனை காணொலியாகப் பதிவு செய்யவும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, மனுதரார் விரும்பினால் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து ஒரு மருத்துவரை அனுமதிப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் மனுதாரர் தரப்பில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், அதன் மருத்துவர்களைக் கொண்டுதான் உடற்கூராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி நிர்மல்குமார், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கோவிந்தராசுவின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு நாளை உடற்கூராய்வு செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் 25-க்கு வழக்கு ஒத்திவைப்பு

கோவிந்தராசுவின் மரணம் தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தினர் ஆரம்பகட்ட விசாரணை நடத்திவரும் நிலையில், அதை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஆய்வாளரின் விசாரணையை பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கண்காணிக்கவும், அதைக் கடலூர் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். காவல் துறையினரின் விசாரணை குறித்த அறிக்கையை நான்கு வாரங்களில் தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 25ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: 3000 கிலோ ஹெராயின் விவகாரம்: விசாரணையைத் தொடங்கிய காவல் துறை

Last Updated : Sep 22, 2021, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details