சென்னை: யாத்திரை என்பது நடைபயணம் மட்டும் இல்லை அது ஒரு கட்சியை அல்லது ஒரு இயக்கத்தை வளர்க்கும் ஆயுதம் ஆகும். இதற்கு இந்தியளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய காந்தியின் உப்பு சத்தியா கிரகம் முதல் தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி திணிப்பு பேரணி வரை பல எடுத்துக்காட்டுகளை கூறலாம்.
இந்த ஆயுதத்தை தற்போது காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி எடுத்துள்ளார். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை (பாரத் ஜோடோ யாத்திரை) நடத்த முடிவு செய்து, அதனை செப்.7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த நடைபயணம் 150 நாட்களில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,500 கிலோ மீட்டர் தூரம் சென்று காஷ்மீரில் நிறைவு பெற உள்ளது.
இதேபோல், கடந்தகாலங்களில் இந்தியாவில் பல்வேறு காரணத்திற்காக பல்வேறு யாத்திரைகள் நடைபெற்று உள்ளன. அவற்றில் முக்கியமான சில யாத்திரைகளை பார்க்கலாம்.
- சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே 1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில், உப்பு வரிக்கு எதிராக தண்டி நோக்கி 388 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை நடைபெற்றது. இது, வரலாற்றில் நடந்த முக்கியமான யாத்திரை ஆகும். இதன் தாக்கத்தால், இந்திய மக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து பல பெயர்களில் பலவிதமான போராட்டங்கள் நடத்தினர்.
- 1983ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் டெல்லி வரை "பாரத் யாத்திரை" என்ற பெயரில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் 6 மாதங்களில் 4,260 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்தார். அது பெரிய அளவில் உதவவில்லை என்றாலும், ஜனதா கட்சியை நாடு முழுவதும் வளர்க்க உதவியாக இருந்தது.
- 1990ஆம் ஆண்டு அத்வானி, பாபர் மசூதி விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு குஜராத்திலிருந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் சென்று அயோத்தி வரை ரத யாத்திரை நடத்தினார். இது வரலாற்றில் ஒரு முக்கிய யாத்திரை ஆகும். இந்த யாத்திரைக்கு பிறகு பாஜக பெரும் வளர்ச்சி பெற்றது. அதுமட்டுமின்றி அடுத்துதடுத்து வந்த தேர்தலில் வெற்றி பெற்றது.
- 2003ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி 60 நாள்களில் 1,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு "பிரஜா பிரஸ்தான பாத யாத்திரை" மேற்கொண்டார். இந்த யாத்திரை முடிந்த பிறகு, 2004ல் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.
- 2011ஆம் ஆண்டு அத்வானி மீண்டும் ஒரு யாத்திரையை மேற்கொண்டார். கருப்பு பண ஒழிப்பை வலியுறுத்தி, 38 நாட்களுக்கு நாடு தழுவிய "ஜன் சேத்னா யாத்திரை" யை பீகாரில் தொடங்கினார். இந்த யாத்திரை தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று டெல்லியில் முடிவடைந்தது. இது பெரும் அளவில் பேசப்படவில்லை என்றாலும், தேர்தல் நேரத்தில் உதவியாக இருந்தது.
- 2012ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 2,817 கிலோ மீட்டர் 208 நாட்கள் "ஒஸ்த்துனானு மிகோசம்" என்ற யாத்திரையை மேற்கொண்டார். அதன் எதிரொலியாக 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
- 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் 192 நாட்கள் தனது மனைவியுடன் யாத்திரை மேற்கொண்டார். அதனால், அடுத்த நடந்த தேர்தலில் அவர் வெற்றிபெற்று, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை நிலைநிறுத்தினார்.
- ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி என்ற கட்சியை தொடங்கிய பிறகு 2019ல் ஜெகன்மோகன் ரெட்டி 341 நாள்களில் 3,648 கிலோ மீட்டர் "ப்ரஜா சங்கல்ப யாத்ரா" என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இதன் மூலம் இந்தியாவிலே அதிக தூரம் நடை பயணம் சென்ற அரசியல் தலைவர் என்ற சாதனையை படைத்தார். இதன் தாக்கத்தால் அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் இதுபோல பல யாத்திரைகள் நடந்துள்ளன.
- 1930ஆம் ஆண்டு உப்பு வரிக்கு எதிராக தண்டி நோக்கிய காந்தியின் நடைபயணத்திற்கு ஆதரவு தரும் வகையில், ராஜாஜி தலைமையில் தஞ்சை மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது.
- 1938ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி "தமிழர் படை" என்ற பெயரில், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் முஸ்லிம் லீக் கூட்டாக சேர்ந்து இந்தித் திணிப்பு எதிராக மாபெரும் பேரணியாகச் சென்று, பட்டிதொட்டியெங்கும் 87 பொதுக்கூட்டங்களை நடத்தினர்.
- 1982ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை 8 நாட்கள், திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைரவேல் மாயம் மற்றும் சுப்பிரமணிய பிள்ளை மரணம் ஆகியவற்றை முன்வைத்து, கருணாநிதி மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரை நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தால் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அரசு கடும் நெருக்கடியை எதிர்கொண்டது, மேலும் இதற்காக குழு அமைக்கப்பட்டது.
- 1994ஆம் ஆண்டு அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை, கோவை, சேலம் வழியாக 1,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு 51 நாட்கள் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். அதற்கு பிறகு மதுவிலக்கு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, காவிரி பிரச்னை என பல பிரச்னைகளுக்காக வைகோ நடைபயணங்கள் மேற்கொண்டார்.
பின்னர் திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்ததால் பெரிய அளவில் எந்த ஒரு யாத்திரையும் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் யாத்திரை என்ற பெயரில் மக்களை சந்தித்து வந்தனர்.
2020ஆம் ஆண்டு வேல் யாத்திரை நடத்தப்போவதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அறிவித்தார். அந்த வேல் யாத்திரை, அறுபடை வீடுகளான திருத்தணியில் நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி திருச்செந்தூரில் டிசம்பர் 6ஆம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டது.