சென்னை:அண்ணா நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் நேரு. இவர் கொளத்தூர் ஐயப்பா நகரில் பாக்கியலட்சுமி அக்ரோ புரோடக்ட்ஸ் என்ற பெயரில் உணவு பொருள் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
கடந்த 20 ஆம் தேதி நேருவை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், வணிக வரித்துறையில் துணை ஆணையராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் நிறுவனம் 4 கோடி ரூபாய் வரை ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், 25 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றுவதாக நேருவிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நேரு, ரூ.25 லட்சம் கொடுக்க முடியாது ரூ.10 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டு நேரில் பெற்று கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதனிடையே நேருவிற்கு அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் இது குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், எந்த வித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் ரூ.10 லட்சத்தை தியாகராய நகர் ராஜாசார் தெருவிற்கு கொண்டு வருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் நேற்று முன்தினம் (ஜூலை 25) நேரு, ராஜாசார் தெருவிற்கு சென்று, அந்த நபரிடம் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்களை வாங்கி விசாரித்தபோது போலியான ஆவணங்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சூதாரித்த நேரு, உடனடியாக அவரது நண்பர்களுடன் இணைந்து அவரைப் பிடித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.