சென்னை: புரசைவாக்கம் டாக்டர் ராஜா அண்ணாமலை சாலையில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு வந்த, பானுமதி, சாவித்திரி, பிரசாத் மேத்யூ என்ற மூவர், மத்திய பிரதேசம் போபாலில் இயங்கி வரும் திலீப் பில்டு கான் நிறுவனம் (Dileep BuildCon Ltd) என்ற நிறுவனத்தின் காசோலை ஒன்றை கொடுத்துள்ளனர்.
அந்த காசோலையில் குறிப்பிடப்பட்ட ரூ. 9 கோடியே 99 லட்சத்து 91 ஆயிரம் என்ற தொகையை சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையிலுள்ள ராம் சரண் என்ற நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும் என சமர்ப்பித்ததுள்ளனர். திலீப் பில்டு கான் நிறுவனம் என்பது மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இயங்கிவரும் மிகப் பிரபலமான நிறுவனம். நெடுஞ்சாலை, மேம்பாலங்கள் மிகப்பெரிய கட்டடங்கள் போன்ற கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் பெயரில் வந்த காசோலை என்பதாலும், மிகப் பெரிய தொகை என்பதாலும் வங்கி ஊழியர் சற்று சந்தேகமடைந்தார். பின்னர், காசோலை எண்ணை வைத்து அந்நிறுவனத்திற்கு மின்னஞ்சல் (Mail) மூலம் விவரங்களை கேட்டுள்ளார். இதற்கு, இந்த காசோலை எண் 2018ஆம் ஆண்டு பரிவர்த்தனை செய்யப்பட்டது போபாலிலுள்ள அந்நிறுவனத்தில் இருந்து வந்த பதில் வந்தது. இதனை போலியாக யாரோ பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்தனர்.
மோசடியில் ஈடுபட்ட 9 பேர் கைது
இதையடுத்து காசோலையை கொண்டு வந்த நபர்களுக்குத் தெரியாமல் பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் ரவிகுமார் கீழ்பாக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்க, அடுத்த சில மணி நேரத்திலே உதவி ஆணையர் ரமேஷ் தலைமையிலான காவல் துறையினர் வங்கிக்கு வந்தனர். வங்கியில் காசோலையை மாற்ற முயன்ற பானுமதி, சாவித்திரி, பிரசாத் மேத்யூ மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அகீம் ராஜா, நாராயணன், அஜித்குமார், கோபிநாதன், செந்தில்குமார், முருகன் உள்பட மொத்தம் 9 பேரையும் கைது செய்தனர். மோசடியில் கைது செய்யப்பட்ட முருகன் என்பவர் தொண்டாமுத்தூர் பகுதியில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருவது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், போபாலிலுள்ள திலீப் பில்டு கான் கட்டுமான நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் தொடர்பில் உள்ளதால், அடிக்கடி பரிவர்த்தனை நடப்பதை அறிந்து, அந்த நிறுவன காசோலையை திருடி முத்திரை, கையெழுத்து உள்ளிட்டவற்றை போலியாக பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து 10 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.